UAE Tamil Web

“நீங்க என்னோட அப்பா மாதிரி.. பணம் எல்லாம் வேண்டாம்” – உதவி செய்துவிட்டு பணம் வாங்க மறுத்த காவல்துறை அதிகாரிக்கு குவியும் பாராட்டுகள்..!

UAE hero cop

சார்ஜன்ட் அகமது ஹசன் அல் ஹம்மாடி. இந்தப் பெயர் தான் இப்போது அமீரகத்தில் பலராலும் உச்சரிக்கப்பட்டு வருகிறது. ஷார்ஜா காவல்துறையின் போக்குவரத்து பிரிவில் பணிபுரியும் இவர், மிகவும் பரபரப்பான சாலையான ஷேக் முகமது பின் சயீத் சாலையில் கடந்தவாரம் ரோந்து சென்றுள்ளார்.

- Advertisment -

அப்போது சூடானைச் சேர்ந்த சைன் அல் அபிதின் என்பவர் சாலையின் நடுவே நின்றுபோன வாகனத்தை சிரமப்பட்டு நகர்த்திக்கொண்டிருந்திருக்கிறார். இதனைக்கண்ட ஹம்மாடி தனது காரைவிட்டு இறங்கிச் சென்று அவருக்கு உதவியிருக்கிறார்.

இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் பார்த்துக்கொண்ட ஹம்மாடி, வாகனத்தை இழுத்துச்செல்ல (towing service) ஏற்பாடு செய்துள்ளார். இதற்கான பணத்தையும் ஹம்மாடியே கொடுத்துள்ளார். அபிதின் பணத்தை அளிக்க முயன்றிருக்கிறார். ஆனால், அதனை வாங்க மறுத்த ஹம்மாடி,” நீங்கள் என்னுடைய அப்பா அல்லது மூத்த சகோதரர் போன்றவர். நீங்கள் எனக்கு பணம் கொடுக்கத் தேவையில்லை” எனத் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து ரேடியோ நேரலை ஒன்றில் பேசிய அபிதின்,” அவருடைய பெயரை அவரது பேட்ஜ் மூலமாக அறிந்துகொண்டேன். நல்லவர்களால் இன்னும் இந்த பூமியில் நன்மைகள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. இதை மற்றவர்களும் அறிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவே இதனை ரேடியோவில் கூற முடிவெடுத்தேன்” என்றார்.

இதுமட்டுமல்லாமல், இந்த சம்பவத்தைக் கேள்விப்பட்ட அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஹம்மாடியை தனது ட்விட்டர் பதிவின் மூலமாகப் பாராட்டியிருக்கிறார்.

இளவரசர் தனது ட்விட்டர் பக்கத்தில்,” உதவி செய்வதும் நற்செயல்களை மேற்கொள்வதும் இந்த மண்ணின் தொன்றுதொட்ட பாரம்பரியமாகும். அபிதின் ஷார்ஜா காவல்துறையைச் சேர்ந்த ஹம்மாடியின் உதவியை நன்றியுடன் நினைவுகூர்ந்திருக்கிறார். இவர்கள் நம் ஆசிர்வதிக்கப்பட்ட பூமியின் அங்கமாவார்கள். நான் அவர்களுக்கு நன்றி கூறுகிறேன். அவர்கள் மட்டுமல்லாது பிறருக்கு உதவிசெய்து இம்மண்ணின் மகத்துவத்தை வெளிப்படுத்தும் அனைவருக்கும் எனது நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.