UAE Tamil Web

உலகின் மிகவும் செல்வாக்கான நாடுகள் : டாப் 10 ல் அமீரகம் – அமெரிக்காவைப் பின்னுக்குத்தள்ளி சாதனை..!

dubai

2020 ஆம் ஆண்டிற்கான உலகின் மிகவும் செல்வாக்கு பெற்ற நாடுகள் மற்றும் நகரங்களின் பட்டியலை ஃபியூச்சர் பிராண்ட் (FutureBrand) அமைப்பு இந்த வார துவக்கத்தில் வெளியிட்டிருக்கிறது. சுமார் ஆறுமாத காலம் நடைபெற்ற கருத்துக்கணிப்பின் அடிப்படையில் இந்த டாப் 10 பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

- Advertisment -

பெருநிறுவனங்களின் தலைமை அதிகாரிகள், அரசு உயரதிகாரிகள் மற்றும் வலிமைமிக்க நபர்கள் என உலகம் முழுவதும் 2500 பேர் இந்த கருத்துக்கணிப்பில் கலந்துகொண்டனர். உலக வங்கியினால் தேர்ந்தெடுக்கப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சிறந்து விளங்கும் டாப் 75 நாடுகளைப் பற்றியும் அவற்றின் மதிப்பீடுகள் குறித்தும் இந்த அதிகாரிகள் கருத்துக்களை வழங்கியிருக்கிறார்கள்.

கொரோனா காலத்தில் சிக்கலை இந்நாடுகள் திறம்பட கையாண்ட விதத்தையும் கணக்கில் கொண்டு பட்டியல் தயார் செய்யப்பட்டிருக்கிறது.

அமீரகத்திற்கு 9 வது இடம்

ஆஸ்திரேலியா (11), ஐக்கிய ராஜ்ஜியம் (20) மற்றும் அமெரிக்காவை (13) பின்னுக்குத்தள்ளி அமீரகம் பட்டியலில் 9 வது இடத்தைப் பிடித்திருக்கிறது. அதேபோல செல்வாக்குமிக்க டாப் 10 நகரங்களின் பட்டியலில் துபாய் 9 ஆம் இடத்தைப் பிடித்திருக்கிறது.

அமீரகத்தைப் பற்றி குறிப்பிடுகையில்,” கண்டிப்பான முறையில் யாராலும் தவிர்க்க முடியாதபடி கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆட்சியாளர்கள் மேற்கொண்டனர். பொது இடங்களில் முகக்கவசம் மற்றும் சானிடைசர் ஆகியவற்றை அரசு வழங்கியது” என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மாறும் எண்ணங்கள்

பிற நாடுகள் தங்களைப்பற்றி பாஸிட்டிவாக நினைக்கிறார்களா? நெகட்டிவாக நினைக்கிறார்களா? அல்லது இரண்டுக்கும் மத்தியிலா எனவும் அந்தந்த நாடுகளைச் சேர்ந்த மக்கள் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.

தங்களை உலக நாடுகள் பாசிட்டிவாக பார்க்கின்றன எனத் தெரிவித்திருக்கும் நாடுகள் : ஜப்பான், சீனா, ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, இந்தியா, தாய்லாந்து மற்றும் அமீரகம்.

தங்களை உலக நாடுகள் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் என கலவையாகப் பார்க்கின்றன எனத் தெரிவித்திருக்கும் நாடுகள் : அமெரிக்கா, ஐக்கிய ராஜ்ஜியம், பிரேசில், பிரான்ஸ், மெக்சிகோ, ரஷியா, தென்னாப்பிரிக்கா மற்றும் துருக்கி.

இதில் அர்ஜென்டினா தங்களை உலக நாடுகள் நெகட்டிவாக பார்க்கின்றன எனத் தெரிவித்திருக்கிறது.

பொருளாதார மையம்

“மத்திய கிழக்கின் பொருளாதார மையமாக அமீரகம் திகழ்கிறது. கலாச்சார ரீதியாக பழைமைவாத நாடாக இருந்தாலும் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் தாராளவாத கொள்கைகளை அமீரகம் கொண்டுள்ளது. வளைகுடா நாடுகளிலேயே முதன்முறையாக இவ்வருடம் இஸ்ரேலுடன் ராஜாங்க நடவடிக்கைகளை அமீரகம் துவங்கியுள்ளது. இதன்காரணமாக பிராந்தியத்தின் அதிகார மையமாக அமீரகம் கருதப்படுகிறது. சிறிய நாடாக இருந்தாலும் உயரிய இலட்சியங்களை அமீரகம் கொண்டிருக்கிறது. நிச்சயம் கவனிக்கப்பட வேண்டிய தேசம்” என ஃபியூச்சர் பிராண்ட் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்வாக்குமிக்க டாப் 10 நாடுகள்

  1. ஜப்பான்
  2. ஸ்விட்சர்லாந்து
  3. நார்வே
  4. ஜெர்மனி
  5. கனடா
  6. டென்மார்க்
  7. பின்லாந்து
  8. ஸ்வீடன்
  9. அமீரகம்
  10. நியூசிலாந்து

செல்வாக்குமிக்க டாப் 10 நகரங்கள்

  1. நியூயார்க்
  2. பெய்ஜிங்
  3. வாஷிங்க்டன்
  4. லண்டன்
  5. டோக்கியோ
  6. பாரிஸ்
  7. மாஸ்கோ
  8. ஷாங்காய்
  9. துபாய்
  10. பெர்லின்