UAE Tamil Web

தீபாவளிக்குப் பிறகு அமீரகத்திலிருந்து இந்தியா செல்லும் விமானங்களின் டிக்கெட் விலை குறையும்..!

INDIA-AIRPORT-CHENNAI-

அமீரகம் – இந்தியா இடையே விமானப் போக்குவரத்து மெல்ல சகஜ நிலைக்குத் திரும்பி வருகிறது. அமீரகத்தில் வேலை இழந்த இந்தியர்கள் மற்றும் கொரோனா காரணமாக தாயகம் திரும்புவோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதும், இரு நாடுகளுமே தங்களது சுற்றுலா துறையை மீண்டும் திறந்துவருவதும் விமானப் போக்குவரத்தை பழைய நிலைக்குக் கொண்டுவந்திருக்கிறது.

- Advertisment -

இந்திய விமான நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் விமானங்களை இயக்க முடிவெடுத்திருப்பதால் கட்டணங்கள் எதிர்வரும் காலத்தில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“முன்பு இருந்ததை விட 20 – 30 சதவிகிதம் கார்ப்பரேட் பயணங்கள் அதிகரித்திருப்பதைப் பார்க்க முடிகிறது. இருப்பினும் பயணிகளுக்கு கொரோனா குறித்த அச்சம் இன்னும் விலகவில்லை. சில நாடுகளும் விமான சேவைகளை மீள் திறப்பு செய்யாமல் இருக்கின்றன. வரும் மாதங்களில் இந்த நிலைமை சீராகும். குறிப்பாக ஜனவரியில் விமானப் போக்குவரத்து மேம்படும்” என ப்ளூடோ டிராவல்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் அவினாஷ் அத்னானி தெரிவித்தார்.

“டிசம்பர் – ஜனவரிக்குப் பிறகு மக்கள் தங்களது தொழில் மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக பயணங்களை மேற்கொள்வார்கள். ஆகவே அமீரகம் – இந்தியா இடையே விமான போக்குவரத்து சேவை மேம்படும்” என அல் அவல் டூரிசம் நிறுவனத்தின் தொழில் மேம்பாட்டு மேலாளர் திரு. முகமது ஜாஃபர் தெரிவித்தார்.

“இந்தியர்கள் தங்களது பெற்றோரை இங்கே (அமீரகத்திற்கு) அழைத்துவரத் துவங்கியுள்ளனர். இவர்கள் கொரோனாவால் தங்களது பயணத்தைத் தொடர முடியாமல் போனவர்கள். அதுமட்டுமல்லாமல் எமிரேட்ஸ், இண்டிகோ, விஸ்தாரா போன்ற நிறுவனங்கள் அதிகளவில் விமானங்களை இயக்க முடிவு செய்திருக்கின்றன. இந்தியாவில் சுற்றுலாத்துறையும் மெல்ல மீண்டிருப்பதும் ஒரு காரணமாகும். இருப்பினும் பயணிகள் கொரோனா பரிசோதனை எடுத்துக்கொள்ள அஞ்சுகின்றனர்” என அத்னானி தெரிவித்தார்.

டிக்கெட் விலை குறையும்

தீபாவளி நேரத்தில் துபாய் – மும்பை இடையேயான ஒருவழிப் போக்குவரத்திற்கு 560 திர்ஹம்ஸ் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அடுத்த வாரத்தில் விலை 20 சதவிகிதம் வீழ்ச்சியை சந்திக்கும். அதாவது 400 – 450 திர்ஹம்களில் டிக்கெட் விற்பனையாகும் என அத்னானி தனது பேச்சின்போது குறிப்பிட்டார்.

சர்வதேச பயணிகளுக்கு நிறுவன தனிமைப்படுத்தலில் இருந்து விலக்களித்தல் என்ற இந்திய அரசின் முடிவு விமானப் போக்குவரத்து சேவையில் கணிசமான மாற்றத்தை ஏற்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“கொரோனா உச்சத்தில் இருந்தபோது 1000 திர்ஹம்சில் இருந்த டிக்கெட்டின் விலை தற்போது 400 திர்ஹம்ஸ் வரையிலும் குறைக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் மேலும் கட்டண குறைப்பு நிகழும். குறிப்பாக தீபாவளிக்குப் பிறகு NRI மக்கள் பெருமளவில் பயணிப்பார்கள் என்பதால் கட்டணங்கள் குறைய வாய்ப்புள்ளது” என ஜாஃபர் தெரிவித்தார்.