UAE Tamil Web

3 மடங்கு விலை குறைந்துள்ள அமீரகம் – இந்தியா விமான டிக்கெட்டுகள் – பயணிக்க ஆர்வம் காட்டாத இந்தியர்கள்..!

Abu-dhabi-Airport-passengers

அமீரகத்தில் பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறைகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. மேலும், கிறிஸ்துமஸ் புத்தாண்டு என அடுத்தடுத்து வரவிருக்கும் விடுமுறைகள் காரணமாக எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் அமீரகம் – இந்தியா இடையிலான விமானப் போக்குவரத்து இந்தாண்டு மந்தமாகியுள்ளதாக டிராவல் ஏஜெண்ட்கள் தெரிவித்துள்ளனர்.

துபாய் – மகாராஷ்டிரா பயணிப்பவர்கள் 7 நாட்கள் குவாரண்டைன் இருத்தல் வேண்டும் என மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. அதேபோல, கர்நாடகா அரசும் இதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் ஒமிக்ரான் பரவல் அதிகமாகி வருவதால் ஒவ்வொரு மாநிலமும் பயணக் கட்டுப்பாடுகளை விதித்துவருகின்றன.

இந்நிலையில், அமீரகத்திலிருந்து இந்தியா செல்ல பலரும் ஆர்வம் காட்டவில்லை என்கிறார்கள் பயண முகவர்கள். கொரோனா பரவல் காரணமாக இந்தியா அமீரகம் இடையே மீண்டும் பயணத் தடை விதிக்கப்பட்டால் சிரமங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என பொதுமக்கள் நினைப்பதே இந்த நிலைக்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.

துபாயில் பணிபுரிந்துவரும் ஜார்ஜ் இதுகுறித்துப் பேசுகையில், “கடந்தாண்டு மார்ச் மாத மத்தியில் இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமானது. இதனால் சில குறிப்பிட்ட பிரிவினர் தவிர மற்றவர்கள் அமீரகத்திற்குப் பயணிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. சென்றமுறை இந்தியாவில் சிக்கிக்கொண்டேன். ஆகவே, இந்தமுறை இந்தியாவிற்குச் செல்வது குறித்து பொறுத்திருந்துதான் முடிவெடுப்பேன்” என்கிறார்.

3 மடங்கு வரை விலை குறைந்த டிக்கெட்கள்

ஸ்மார்ட் டிராவல்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் அஃபி அகமது இந்த சூழல் குறித்துப் பேசுகையில்,” இந்தியாவின் பல்வேறு இடங்களுக்குப் பயணிக்க ஒருவழி (One Way) விமான டிக்கெட்கள் 500 – 600 திர்ஹம்ஸ் கட்டணத்தில் கிடைக்கின்றன. இது வழக்கமாக இந்த மாதத்தில் விற்கப்படும் விலையை விட 3 மடங்கு குறைவாகும். மக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சமே இந்த விலை குறைவிற்குக் காரணம்” என்றார்.

அவசர தேவைகளுக்காக இந்தியா செல்வோர் மட்டுமே தற்போது அமீரகத்திலிருந்து இந்தியாவிற்குப் பயணித்து வருகின்றனர். மீண்டும் இந்தியா – அமீரகம் இடையே பயணத்தடை ஏற்படுவது தங்களை கடுமையாகப் பாதிக்கும் என்பதே பெரும்பாலான பயணிகளின் எண்ணமாக உள்ளது.

Abu-dhabi-Airport-passengers
12 Shares
Share via
Copy link