UAE Tamil Web

அமீரகத்திலிருந்து இந்தியா செல்பவர்கள் கவனத்திற்கு: இது மட்டும் இருந்தால் நீங்கள் குவாரண்டைன் இருக்கத் தேவையில்லை..!

Airport (2)

வரும் பிப்ரவரி 23 ஆம் தேதிமுதல் அமீரகத்திலிருந்து இந்தியா செல்பவர்கள் விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்தால் குவரண்டைன் இருக்கத் தேவையில்லை (மாநில அரசுகள் ஆட்சேபனை தெரிவிக்காதபட்சத்தில்) எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கிலிருந்து இந்தியா செல்லும் அனைத்து சர்வதேச பிரயாணிகள் அனைவரும் பிப்ரவரி 23 ஆம் தேதி அதிகாலை 12 மணிமுதல் தங்களது சொந்த செலவில் மாலிகுலர் (PCR) பரிசோதனை செய்துகொள்ளுதல் வேண்டும்.

புதியவகை கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்திய அரசு இந்த முடிவை அறிவித்துள்ளது. இந்த விதிமுறைகள் குழந்தைகள் முதல் அனைத்து வயதினருக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, பயணிகள் தங்களது பயண தேதிக்கு முன்னர் 72 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட நெகட்டிவ் RT-PCR பரிசோதனை முடிவுகளை ஏர் சுவிதா போர்டலில் உள்ளீடு செய்யவேண்டும். அதேநேரத்தில் அந்த பரிசோதனை முடிவுகளை கையில் எடுத்துவரவேண்டும்.

மத்திய கிழக்கில் இருந்து வரும் பயணிகள் நெகட்டிவ் RT-PCR சான்றிதழை வைத்திருக்கும்பட்சத்தில் அவர்கள் குவாரண்டைன் இருக்கவேண்டிய அவசியமில்லை என இந்திய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் நேற்று தெரிவித்திருந்தது.

இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவர் பேசுகையில்,” எங்களுடைய வழிகாட்டு நெறிமுறைகள் அடிப்படையில் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கில் இருந்து வருபவர்கள் மற்றும் பிரேசில், தென்னாப்பிரிக்கா, ஐக்கிய ராஜ்ஜியம் அல்லாத பிற இடங்களில் இருந்து வருபவர்கள் தங்களது வருகையின்போது ரத்த மாதிரிகளை கொடுத்துவிட்டு விமான நிலையத்தினைவிட்டு வெளியேறலாம்” என்றார். முடிவுகள் வெளியான பிறகு பயணிகளுக்கு அவை தெரிவிக்கப்படும். இதற்கு 10 மணிநேரம் ஆகலாம் என ஏர் சுவிதா போர்டலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பரிசோதனை முடிவு பாசிட்டிவ் ஆக வரும்பட்சத்தில் அவர்கள் சிகிச்சை பெறவேண்டும். நெகட்டிவ் என்றால் அடுத்த 14 நாட்களுக்கு தங்களை சுய கண்காணிப்பிற்குள் வைத்துக்கொள்ளவேண்டும். வீட்டிலோ அல்லது நிறுவன தனிமைப்படுத்தலோ கட்டாயமில்லை.

எதுவாகினும் மாநில அரசுகள் வகுத்துள்ள குவாரண்டைன் விதிமுறைகளை பயணிகள் கடைபிடிக்கவேண்டும். உதாரணமாக, கேரளாவிற்கு வரும் பயணிகள் அனைவரும் 7 நாட்கள் தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும். எட்டாவது நாள் கொரோனா பரிசோதனையை மேற்கொண்டு நெகட்டிவ் என வந்தால் வீட்டு தனிமைப்படுத்தலை முடித்துக்கொள்ளலாம்.

PCR பரிசோதனைக்கான கட்டணம் எவ்வளவு?

மாநில அரசுகள் வகுத்துள்ள அளவின் அடிப்படையிலேயே PCR பரிசோதனைக்கான கட்டணங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. உதாரணமாக டெல்லி விமான நிலையத்தில் நீங்கள் RT-PCR பரிசோதனை மேற்கொள்ள 3,400 ரூபாய் செலவாகும். இது பரிசோதனை மற்றும் லவுஞ் கட்டணத்தை உள்ளடக்கியது என ஏர் சுவிதா போர்டலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் லெவல் 1 ல், விமான நிலைய இணைப்பு கட்டிடம் 3 ஆம் முனையத்தில் பரிசோதனை வசதி செய்யப்பட்டிருக்கிறது.

கேரள விமான நிலையங்களில் RT-PCR பரிசோதனைக்கான கட்டணம் 1,700 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சில விமான நிலையங்கள் இந்த பரிசோதனை எடுக்கும் பணிகளை தனியார் துறையினரிடம் அளித்திருக்கிறார்கள். சமூக விலகல் உள்ளிட்ட கொரோனா முன்னெச்சரிக்கை விதிமுறைகளுடன் குறைவான நேரத்தில் பரிசோதனைகளை மேற்கொள்வது என்ற இலக்கை அடைய இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதாக வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதியன்று இந்திய சுகாதாரத்துறை மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் ஆகியவை சர்வதேச பயணிகளுக்கான கொரோனா விதிமுறைகளை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Airport (2)
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap