UAE Tamil Web

அமீரகத்தில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர் – 5 லட்சம் திர்ஹம்ஸ் செலுத்தி விடுதலை பெறச் செய்த லூலூ மால் உரிமையாளர் யூசப் அலி..!

Krishnan

கன நேரத்தில் நிகழும் தவறு. சில நேரங்களில் அதற்கு விலையாக மொத்த வாழ்க்கையையும் வளைத்துக்கொள்ளும். அப்படித்தான் நடத்திருக்கிறது கிருஷ்ணனின் வாழ்விலும்.

2012 செப்டம்பர் மாதம். சாலையில் நடந்துசென்றுகொண்டிருந்த சின்னஞ் சிறுவர்கள் மீது கிருஷ்ணன் ஓட்டிவந்த கார் மோதியிருக்கிறது. பதின்ம வயதுப் பாலகன் ஒருவன் காரின் வேகத்தினால் வீழ்த்தப்பட்டு உயிரிழக்க கிருஷ்ணனும் கைதுசெய்யப்பட்டார். அமீரக உச்ச நீதிமன்றம் வரையிலும் கிருஷ்ணன் தரப்பு சென்றாலும் நீதிமன்றம் தூக்குமேடைக்கே வழிகாட்டியது.

இனி இந்தத் தவறை செய்ய மாட்டேன், மீண்டும் வாழ ஒரு வாய்ப்புத் தாருங்கள் என கிருஷ்ணன் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை பரிசீலிக்க வாய்ப்பில்லாமல் போனது. இறந்துபோன பிஞ்சின் பெற்றோர் சூடானுக்குச் சென்றுவிடவே மன்னிப்பும் கிடைக்கவில்லை. பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை. மன்னிப்பு இல்லையேல் மரணதண்டனை தான். இரண்டுக்கும் மத்தியில் 9 வருடங்களாக கிருஷ்ணனும் அவரது குடும்பமும் ஓடிச் சலித்தனர்.

இந்தப் போராட்டத்தில் இருந்து மீண்டுவர மரணத்தைத் தவிர மார்க்கமில்லை எனக் காலம் விரைவிலேயே காட்டிவிட்டது. அப்போதுதான் நம்பிக்கையின் நாற்றாக, உள்ளத்து ஈரத்தின் ஊற்றாக உதவ முன்வந்திருக்கிறார் லூலூ மாலின் அதிபர் யூசப் அலி.

சூடானில் வசித்துவந்த மகனை இழந்த தாய் தந்தையரை அபுதாபிக்கு தனது சொந்த செலவில் அழைத்துவந்து, மன்னிப்பு மட்டுமே மாமனிதரின் குணம் எனப் புரியவைத்திருக்கிறார் அலி. அவரது பங்குதாரர்களிடம் பேசி விஷயத்தை விளக்கியிருக்கிறார். அவர்களும் ஒப்புக்கொள்ளவே 5 லட்சம் திர்ஹம்ஸ் பணத்தை பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்கி கிருஷ்ணின் புதிய வாழ்விற்கான புது வெளிச்சத்தை பாய்ச்சியிருக்கிறார் யூசப் அலி.

ஆண்டுகள் பலவும் சிறைச்சாலையில் இருளில் முடங்கிக்கிடந்த கிருஷ்ணன், யூசப் அலியின் அளப்பரிய உதவியால் இழந்த வாழ்க்கையை மீண்டும் தனதாக்கியிருக்கிறார். வாய்ப்பும், வசதியும் இன்றி வாழ்நாள் வதையை எதிர்கொண்ட கிருஷ்ணனின் வாழ்க்கையில் மீண்டும் வசந்தம் வீசத் துவங்கியிருக்கிறது.

இதன்காரணமாக இணையப்பக்கங்களில் எல்லாம் யூசுப் அலியின் இமாலய இதயத்திற்கு நன்றி தெரிவித்துவருகிறார்கள் ஈரங்கொண்ட இந்தியர்கள்.