அஜ்மானில் வசித்துவரும் தமிழரான பாண்டியன் நேற்று ஒரு ATM அருகே கிடந்த பணத்தினைப் பார்த்திருக்கிறார். உடனேயே அதை எடுத்துக்கொண்டு காவல் நிலையத்திற்குச் சென்ற அவர், பணத்தை காவலதிகாரியிடம் ஒப்படைத்தார்.
இதனையறிந்த அஜ்மான் காவல்துறையின் துணைத் தளபதி அலுவலகத்தின் இயக்குனர் லெப்டினன்ட் கர்னல் அப்துல்லா கல்ஃபான் அப்துல்லா அல் நுவைமி, பாண்டியனை நேரில் வரவழைத்து அவருக்கு பாராட்டுச் சான்றிதழை வழங்கி கவுரவித்துள்ளார்.
இதுகுறித்துப் பேசிய நுவைமி,” சமூகத்திற்கு நேர்மையாக நடந்துகொள்ளும் ஒவ்வொரு நபரையும் பாராட்டுவது எங்களது கடமையாகும். பாண்டியன் அனைவருக்குமான ஓர் உதாரணம்” என்றார்.
அஜ்மான் காவல்துறையிடம் இருந்து பாராட்டுச் சான்றிதழ் பெற்றது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் காவல்துறை மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றிபெற வாழ்த்துவதாகவும் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
