UAE Tamil Web

“மர்ம சக்திகள்” உலவும் கைவிடப்பட்ட நகரம் – ராஸ் அல் கைமாவில் உள்ள “பேய் நகரத்தின்” இன்றைய நிலை..!

GHOST VILLAGE

சுமார் 7000 ஆண்டுகள் நீண்ட வரலாறு கொண்டது ராஸ் அல் கைமா எமிரேட். இங்கு பழைமையான நகரங்கள் இருக்கின்றன. அவற்றுள் ஒன்றுதான் ஜஸீரா அல் ஹம்ரா நகரம். ராஸ் அல் கைமாவின் மீனவப் பூர்வகுடிகள் 20 ஆம் நூற்றாண்டில் இங்கிருந்து புலம்பெயர்ந்து சென்றதாக சரித்திர சான்றுகள் கூறுகின்றன.

இன்றும் அல் ஹம்ரா நகரத்தைப் பற்றி இணையத்தில் தேடினால் உங்களுக்கு சுவாரஸ்யமான தகவல்கள் படிக்கக்கிடைக்கும். மக்கள் இந்த நகரத்தைவிட்டு சென்றதற்குப் பிறகு இங்கே பேய்கள் உலவுவதாக பல பேர் பல வகைகளில் கதை சொல்லத்தொடங்கியது கடைசி பத்தாண்டுகளில் தான் மிக அதிகம். இதை பலரும் நம்பத்தான் செய்கிறார்கள். ஆனால் இவையனைத்துமே கர்ண பரம்பரைக் கதைகளே. எவற்றிற்கும் ஆதாரமோ சாட்சிகளோ இல்லை.

சமீபத்தில் அமீரகத்தில் நடைபெற்ற அரேபியன் டிராவல் மார்கெட் 2021 ல் பங்கேற்ற ராஸ் அல் கைமா சுற்றுலாத்துறையின் தலைமை நிர்வாக அதிகாரி ராகி பிலிப்ஸ் இதுகுறித்துப் பேசுகையில்,”அங்கே பேய்கள் எல்லாம் ஒன்றுமில்லை. அது ஓர் அழகான சுற்றுலாத்தலம் மட்டுமே” என்றார்.

19 ஆம் நூற்றாண்டில் இங்கே வாழ்ந்தவர்கள் பயன்படுத்திய பாதை வழியாகவே இந்த அழகான நகரத்தினை நீங்கள் சுற்றிப்பார்க்கலாம். இங்கு வாழ்ந்து சென்றவர்களின் வீடுகளில் கூட உங்களால் நுழைய முடியும். புராதானம் மட்டுமின்றி இங்குள்ள சாகச அம்சங்களை சுற்றுலாப் பயணிகள் தவறவிடக்கூடாது.

ஜெபல் ஜெய்ஸ் ஸ்கை டூர் மூலமாக 7 சிப்லைன்கள் (ziplines) 9 பிளாட்பார்ம்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று இந்தப் பகுதிக்கும் இயக்கப்படுகிறது. இந்த பயணத்தின்போது கம்பீரமான மலைகளை நம்மால் கழுகுப்பார்வையில் கண்டுரசிக்க முடியும் என ராக்கி தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல் அல் சுவைதி முத்து பண்ணையில் சுற்றுலாவாசிகள் தங்களுக்கான முத்துக்களை சிப்பியில் இருந்து பிரித்தெடுக்கும் கலையைக் கற்றுக்கொள்ளலாம்.

வாதி மலைத் தொடர்களில் இருந்து ஜெய்ஸ் வரைக்கும் பாராகிளைடிங் சேவைகள், ஜெபல் ஜெய்ஸ் மலையின் முகப்புப் பகுதியில் அமைந்துள்ள பிரத்யேக உணவு மற்றும் பான மையங்கள், சுற்றுச்சூழல் சார்ந்த ஹோட்டல்கள், மலைப்பகுதியில் அமைந்துள்ள லாட்ஜ்கள் மற்றும் கேம்ப்கள் என ராஸ் அல் கைமா சுற்றுலாத்துறை இந்தப் பிராந்தியத்தை இன்னும் இரண்டு ஆண்டுகளில் சிறப்பாக மேம்படுத்த இருப்பதாக ராக்கி குறிப்பிட்டார்.

“இயற்கையின் அம்சங்களான கடற்கரை, மலைகள் மற்றும் பாலைவனம் என மூன்றும் ராஸ் அல் கைமாவில் மட்டுமே காணக்கிடைக்கும். இந்த எமிரேட்டில் இருக்கும் இயற்கையின் வளத்தை சுற்றுலாப் பயணிகளுக்கு நாங்கள் காட்சிப்படுத்த இருக்கிறோம்” என ராக்கி தெரிவித்தார்.

வாய்ப்புள்ளவர்கள் பழைமையான இந்த நகரத்திற்குச் சென்றுவாருங்கள்.

GHOST VILLAGE
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap