fbpx
UAE Tamil Web

பல்வேறு சட்டங்களில் அதிரடி திருத்தங்களை அறிவித்துள்ள அமீரகம்.! உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் அறிவிப்பு..

uae

 

நாட்டின் பன்முக கலாச்சார குடியிருப்பாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் முயற்சியில் அமீரகம் சில சட்ட திருத்தங்களை அறிவித்துள்ளது.

ஃபெடரல் தனிநபர் நிலைச் சட்டம், ஃபெடரல் தண்டனைச் சட்டம், ஃபெடரல் குற்றவியல் நடைமுறை சட்டம், ஃபெடரல் சிவில் பரிவர்த்தனை சட்டம் மற்றும் வாரிசு உரிமை சட்டத்தில் அமீரகம் மாற்றங்களை அறிமுகப்படுத்துகிறது.

மேற்கண்ட சட்டங்களின் சில விதிகளை திருத்துவதற்கு அமீரக ஜனாதிபதியான பெருமதிப்பிற்குரிய ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். திருத்தங்கள் உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட மற்றும் சிவில் சட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள மாற்றங்கள் வெளிநாட்டினருக்கு சர்ச்சைகளை தீர்ப்பதற்கும் பன்முக கலாச்சாரத்தை ஊக்குவிப்பதையும் எளிதாக்கும். தனிப்பட்ட நிலைச் சட்டம், சிவில் நடைமுறைச் சட்டம், தண்டனைச் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் ஆகியவற்றில் சில விதிமுறைகளுக்கு திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

வாரிசு உரிமை சட்டத்தில் மாற்றம்:

தற்போது செய்யப்பட்டுள்ள மாற்றங்களின் படி அமீரக குடிமக்கள் அல்லாதோர் இப்போது தங்கள் சொந்த நாடுகளின் சட்டங்களை வாரிசு உரிமை போன்ற விவகாரங்களைக் கையாள்வதில் இனி பயன்படுத்தலாம். ஒரு வெளிநாட்டவர் இறக்கும் போது, அவரது / அவளது சொந்த நாட்டின் பர்சனல் ஸ்டேட்டஸ் சட்டப்படி அவரது உயில் மற்றும் தோட்டங்களை நிர்வகிக்க முடியும். இருப்பினும் ஒரு உயில் ஏற்கனவே நடைமுறையில் இருந்தால், அதுவே பின்பற்றப்பட்டு மதிக்கப்படும்.

தற்கொலை:

தற்கொலை முயற்சிகள் மற்றும் தன்னை தானே காயப்படுத்தி கொள்வது பொதுவாக சட்டத்தால் தண்டிக்கப்பட கூடிய விஷயமாகும். ஆனால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மாற்றங்களின் படி, தங்களுக்கு தாங்களே தீங்கு விளைவித்து கொள்பவர்கள் மனநல சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்படுவார்கள்.

கவுரவ குற்றங்கள் :

கவுரவக் கொலைகள் விவகாரத்தில் இதுவரை கடைபிடிக்கப்பட்டு வந்த மென்மையான போக்கு ஒழிக்கப்பட்டுள்ளது. குடும்பத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தும் பெண்களை தாக்கும் உறவினர்களுக்கு இனி எளிதான தண்டனைகள் கிடையாது. மேற்கண்ட குற்றங்கள் இப்போது முற்றிலும் கடுமையான தண்டனைக்கு உட்பட்டவை.

மது அருந்துதல்:

புதிதாக செய்யப்பட்டுள்ள மாற்றங்களின்படி 21 வயதிற்கு மேற்பட்டவர்கள் மது அருந்துவது குற்றம் அல்ல என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்படி ஒருவர் மது அருந்த குறைந்தபட்சம் 21 வயது நிரம்பி இருக்க வேண்டும். 21 வயதிற்கு குறைவானவர்கள் குடிப்பது தண்டனைக்குரிய குற்றம். முன்னதாக, மது வைத்திருந்த ஒரு நபர் மற்றொரு குற்றச் சம்பவத்தில் சிக்கியிருந்தால் அவர் மீது குற்றம் சாட்டப்படலாம். தனிப்பட்ட முறையில் அல்லது பொதுவில், லைசென்ஸ் பெற்ற வணிகங்களில் மட்டுமே மது அருந்த முடியும்.

உதவி மனப்பான்மை கொண்டவர்களுக்கு..

பிறருக்கு அவசர உதவி புரியும் போதோ அல்லது மீட்பு நோக்கத்தின் போதோ ஏதேனும் காரணங்களால் திட்டமிடப்படாத தீங்கு விளைவித்தவர்கள் இனி புதிய மாற்றங்களின் படி தீமைக்கு பொறுப்பாக்கப்பட மாட்டர்கள்.

1992-ம் ஆண்டின் 35-ம் தண்டனை நடைமுறைச் சட்டத்தில் ஒரு புதிய மாற்றம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, அதன்படி சந்தேக நபருக்கோ அல்லது சாட்சிகளுக்கோ அரபு மொழி தெரியாவிட்டால், ஒரு மொழிபெயர்ப்பாளர் இருக்க வேண்டும் என்று அங்கீகரிக்கப்பட்ட நீதித்துறை கைது அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதிய மாற்றங்களின்படி ஒருமித்த பாலியல் உறவு (திருமணமாகாத இருவர் உடன்படுவது), திருமணமாகாமல் சேர்ந்து ஒரே இடத்தில வாழ்வது சட்டத்தால் தண்டிக்கப்படாது. இதற்கு முன் திருமணமாகாத ஜோடி அல்லது தொடர்பில்லாத பிளாட்மேட்ஸ் உடன் தங்குமிடத்தை பகிர்ந்து கொள்வது சட்டவிரோதமானதாக இருந்தது. ஆனால் மைனர் அல்லது மனநலம் பாதிக்கப்பட்ட நபருடன் பலவந்தமாக உடலுறவு கொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு,குற்றம் நிரூபனமானால் மரண தண்டனை வழங்கப்படும்.