புஜைராவில் இன்று காலை 5 வயது சிறுவன் ஒருவன் மீது கார் மோதியதில் அவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறான். பெற்றோரின் முன்னிலையிலேயே அச்சிறுவன் உயிரிழந்தது சம்பவத்தை நேரில் பார்த்த அனைவரையும் கலங்கடித்தது. இறந்த சிறுவனை மடியில் கிடத்திக்கொண்டு சிறுவனின் தாய் கதறியழுத காட்சி அனைவரின் கண்களையும் குளமாக்கிவிட்டது.
எகிப்தைச் சேர்ந்த இச்சிறுவன் Sakmkam பகுதியில் உள்ள தனது பள்ளிக்குச் செல்லும்போது சாலையைக் கடந்திருக்கிறார். அப்போது அரபு நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் சிறுவன் மீது காரை ஏற்றிவிட்டு அங்கிருந்து தப்பியோடியிருக்கிறார்.
இதுகுறித்துப் பேசிய புஜைரா காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு இயக்குனர் கர்னல் சலே அல் தன்ஹாணி,” இந்த விபத்து குறித்து இன்று காலை 7.23 மணிக்கு எங்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புப்படை உயிரற்ற சிறுவனின் உடலை மட்டுமே கைப்பற்ற முடிந்தது” என்றார்.
விபத்தை ஏற்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடிய டிரைவரைக் கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் சிறுவனை தனியாக சாலையை கடக்க அனுமதித்தது பெற்றோரின் கவனக்குறைவைக் காட்டுகிறது என்றும் தன்ஹாணி கடிந்துகொண்டார்.
சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே சிறுவன் உயிரிழந்த சம்பவம் அங்கிருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
