UAE Tamil Web

“அல்லாவின் பெருங்கருணையை உணர்ந்த நேரம் அதுதான்” – மனம் திறக்கும் லூலூ மால் அதிபர் யூசப் அலி..!

Youssuf ali

லூலூ குழுமத்தின் உரிமையாளர் திரு. யூசப் அலி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னதாக கேரளா சென்றிருக்கையில் எதிர்பாராதவிதமாக ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கினார். விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் அவரது மனைவியும் இருந்திருக்கிறார். அதிர்ஷ்டவசமாக சிறிய காயங்களுடன் இவர்கள் உயிர்தப்பினர்.

இந்நிலையில் இதுகுறித்து முதன்முறையாக மனம் திறந்திருக்கிறார் யூசப் அலி. விபத்து குறித்த தன்னுடைய அச்சம் தோய்ந்த நினைவுகளை அவர் பகிர்ந்துகொண்டுள்ளார்.

அதுபற்றிப் பேசுகையில் அவர்,” ஹெலிகாப்டர் திடீரென கட்டுப்பாட்டை இழந்ததை உணர்ந்தோம். விமானி தன்னால் ஏதும் செய்யமுடியவில்லை எனக் கத்தினார். ஹெலிகாப்டர் காற்றில் அலைக்கழிக்கப்பட்டு கீழே வேகமாக இறங்கியது. மோதுவதற்கு முன்பாக காட்டுக்குள் இருந்த வீடு, சிமெண்ட் கலக்கும் லாரி, மின் கம்பங்கள் ஆகியவற்றைப் பார்த்தேன். தரையில் மோதி ஹெலிகாப்டர் நின்றதும் பெரியளவில் பாதிப்பு ஏதுமில்லை என உணர்ந்தேன். அல்லாவின் கருணைதான் அதற்குக் காரணம்”

“ஹெலிகாப்டரில் நான் பின்புறம் இருந்தேன். அதனால் எனது முதுகுப்பகுதியில் அடிபட்டது. உடனடியாக அபுதாபி திரும்பியதும் எனக்கு தண்டுவடத்தில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. 6 ஸ்க்ரூக்கள் முதுகெலும்பில் பொருத்தப்பட்டுள்ளன. அல்லாவின் அளவற்ற அன்பினால் விபத்து பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இல்லையேல் கைகால்கள் செயலிழப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்”

அறுவைசிகிச்சை முடிந்தபிறகு பிசியோதெரப்பி பயிற்சிகள் எனக்கு அளிக்கப்பட்டன. இன்னும் ஒரு மாதத்தில் என்னால் எழுந்து ஓட முடியும். இதெல்லாம் இறைவனின் கருணை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது” என்றார்.

இதனை அச்சுறுத்திய நிகழ்வு என்று நினைத்தாலும் அதனை அதிசய நிகழ்வாக பார்ப்பதாக அலி குறிப்பிட்டார்.

வெளிநாட்டு வாழ் கேரள மக்கள் அமைப்பின் (Norka-Roots) தலைவராகவும் அலி இருந்துவருகிறார். இந்தியாவில் தவிக்கும் அமீரக வாழ் மக்களுக்கு நிவாரணம் கிடைக்கத் தேவையான முயற்சிகளை எடுத்துவருவதாக அலி தெரிவித்தார்.

கொரோனா பரவிய காலம் துவங்கி இந்தியா, சவூதி உள்ளிட்ட நாடுகளில் 26 க்கும் மேற்பட்ட ஹைப்பர் மற்றும் சூப்பர் மார்க்கெட்கள், இணையவழி வர்த்தக மையங்கள் ஆகியவற்றை லூலூ குழுமம் திறந்துள்ளது.

“கூடுதலாக 3000 தொழிலாளர்களை பணியில் சேர்த்துள்ளோம். அடுத்தாண்டிற்குள் கூடுதலாக 30 மையங்களை திறக்க உள்ளோம். இணையவழி வர்த்தகத்தில் மிகப்பெரிய பாய்ச்சலாக எங்களுடைய நடவடிக்கை அமையும்” என அலி குறிப்பிட்டார்.

பயணத்தடை காரணமாக தங்களுடைய 500 பணியாளர்கள் இந்தியாவில் சிக்கிக்கொண்டனர். இருப்பினும் அமீரக அரசு விதித்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தாங்கள் மதிக்கிறோம் என பேசுகையில் அவர் குறிப்பிட்டார்.

“துபாய் எக்ஸ்போவின் இந்திய அரங்கில் எங்களுடைய பங்களிப்பும் நிச்சயம் இருக்கும். அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன” என அலி தெரிவித்தார்.

Youssuf ali
0 Shares
Share via
Copy link