UAE Tamil Web

அஜ்மானில் சம்பளம் கொடுக்காததால் முதலாளி கொடூரமாக குத்திக்கொலை..!

cctv

சம்பளம் கொடுக்காததால் ஊழியர் ஒருவர் தன்னுடைய முதலாளியை குத்தி கொன்ற சம்பவம் அஜ்மானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisment -

30 வயதான ஆசிய நபர் ஒருவர் உணவகத்திற்கு வெளியே அவரின் முதலாளியை கொலை செய்தது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

அந்த சிசிடிவி கேமரா பதிவில் தொழிலாளி ஒருவர் முதலாளியின் பின்னால் செல்வதும், தன் கையில் மறைத்து வைத்திருந்த பிளாஸ்டிக் பையில் இருந்த கத்தியை எடுத்து முதலாளியை குத்த முயற்சிக்கிறார். முதலாளி தப்பிக்க முயற்சி செய்வதும் பின்னர் அந்த தொழிலாளி முதலாளியை கடுமையாக தாக்கி தொண்டை பகுதியிலும் வயிற்றுப் பகுதியிலும் பல முறை சரமாரியாக கத்தியால் குத்துவதும் பதிவாகியுள்ளது. பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்த நீதிமன்ற விசாரணையில் 9 தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் அலைகழித்ததே இந்த கொலை சம்பவத்திற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.

போலீசார் விசாரணையின் போது கொலையாளி கொடுத்த வாக்குமூலத்தில், முதலாளியும் தொழிலாளியும் முன்னொரு நாட்களில் நண்பர்களாக இருந்துள்ளனர். தொழிலாளியை இந்த முதலாளிதான் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வேலைக்கு அழைத்து வந்துள்ளார். அதுமட்டுமின்றி தொழிலாளியிடம் இன்னும் 9 பேரை வேலைக்கு கூட்டி வருமாறும் அவர்களுக்கும் வேலை தருவதாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து அந்த தொழிலாளியும் அவருக்கு தெரிந்த 9 பேரை வேலைக்கு தாயார் செய்யவே, அந்த முதலாளி 9 பேரையும் விசிட் விசாவில் அமீரகம் அழைத்து வந்துள்ளார்.

பின்னர் பல மாதங்கள் ஆகியும் குடியிருப்பு நிலையை மாற்றுவதற்காக தொழிலாளர்கள் முதலாளியிடம் கோரிக்கைகளை வைத்துள்ளனர். ஆனால் அந்த முதலாளியோ குடியிருப்பு நிலையை மாற்றவும் இல்லை. அதுமட்டுமின்றி அவர்களுக்கு சம்பளம் கொடுக்கவும் இல்லை. இதனால் கோபமடைந்த அந்த 9 தொழிலாளர்களும் தன்னை அழைத்து வந்த தொழிலாளியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மிகுந்த அழுத்தம் கொடுக்கவே இதுகுறித்து தொழிலாளி முதலாளியிடம் பலமுறை எடுத்துக் கூறியுள்ளார். இதை முதலாளியும் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார்.

அதே சமயம் இந்த கொலை சம்பவம் நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் முதலாளியை அந்த தொழிலாளி அழைத்து சம்பளம் தரவில்லை என்றால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். உடனே அந்த முதலாளி அலுவலகம் அருகில் உள்ள உணவகம் பக்கத்தில் சந்திப்போம் என்று கூறியுள்ளார். அவர்கள் இருவரும் சந்தித்து பேசும் போது என்னால் பணம் தர முடியாது என்று முதலாளி மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த தொழிலாளி தன் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இவ்வாறு போலீஸ் நடத்திய விசாரணையின்போது தெரியவந்துள்ளது.