UAE Tamil Web

மணிக்கு 205 கிலோமீட்டர் வேகத்தில் பறந்த கார் : இறக்கையை ஒடித்த நீதிமன்றம்..!

high speen

அபுதாபி ஐஸ்லாண்ட் பகுதியில் உள்ள உட்புறச் சாலை ஒன்றில் மணிக்கு 205 கிலோமீட்டர் வேகத்தில் காரை ஓட்டி, பலரின் சோலியை முடிக்க இருந்த இளைஞரை அபுதாபி காவல்துறை கைது செய்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அவர் கார் ஓட்டும்போது அதனை வீடியோ எடுத்த உத்தமரையும் காவல்துறை கைது செய்தது.

பொதுவழக்குத்துறையின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட இருவருக்கும் நீதிமன்றம் 6 மாத கால சிறைத்தண்டனை விதித்தது. அதுமட்டுமல்லாமல் இருவரின் மொபைல் போன் மற்றும் சாகசத்தில் ஈடுபடுத்தப்பட்ட கார் ஆகியவற்றையும் கைப்பற்ற உத்தரவிட்டது. மேலும் இருவரும் தலா 1 லட்சம் திர்ஹம்ஸ் அபராதம் செலுத்துவதுடன் 6 மாத காலத்திற்கு சமூக வலைத்தளங்களை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கல்வி நிறுவனங்கள் மற்றும் குடும்பங்கள் இளைஞர்களிடத்தில் பிறருக்கு ஆபத்து விளைவிக்கும் இத்தகைய செயல்கள் ஏற்படுத்தும் தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என அபுதாபி காவல்துறை தெரிவித்துள்ளது.

மக்களின் வாழ்க்கை, சுகாதாரம், பாதுகாப்பு அல்லது சுதந்திரத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் ஒரு செயலை வேண்டுமென்றே செய்கிற எவருக்கும் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் அல்லது இரண்டில் எதாவது ஒரு தண்டனை விதிக்கப்படும் என்று பெடரல் தண்டனைச் சட்டத்தின் 348 வது பிரிவு கூறுகிறது.

சமூக ஊடக நட்சத்திரங்கள் தங்கள் பார்வையாளர்களின் பதிவுகளை பகிர்ந்து கொள்வதால் அதில் உள்ள உள்ளடக்கத்திலும் பொறுப்பேற்க வேண்டும் என காவல்துறை தெரிவித்துள்ளது. அவர்களைப் பின்தொடர்வதில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் என்பதாலும், அவர்களை முன்மாதிரியாக இளைஞர்கள் எடுத்துக்கொள்வதாலும் இது அவசியமானதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

high speen
0 Shares
Share via
Copy link