அமீரகத்தில் போதைப் பொருள் பயன்படுத்தியது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக 45 வயதான ஆசியாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமீரகத்தில் போதைப்பொருள் பயன்படுத்துவது மற்றும் விற்பனை செய்வது குறித்து துபாய் போதைப் பொருள் தடுப்பு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து குற்றவாளியை பிடிக்க காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
சந்தேகப்படும்படி இருந்த நபர் ஒருவரின் வீட்டிற்கு சென்று சோதனை செய்ததில் அங்கு சந்தேகப்பட்ட நபருடன் சேர்த்து ஒரு ஆணும் ஒரு பெண்ணும் போதை பொருள் பயன்படுத்தி கொண்டிருந்துள்ளனர்.
காவல்துறையின் விசாரணையில் சந்தேகப்பட்ட நபர் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டதோடு, வீட்டு அலமாரியில் மறைத்து வைத்திருந்த போதைப் பொருள்களையும் போலீசாரிடம் ஒப்படைத்தார். சம்பவ இடத்தில் மீதமிருந்த இருவரும் குற்றவாளிதான் போதைப் பொருளை வழங்கியதாக தெரிவித்தனர்.
இதையடுத்து குற்றவாளியை கைது செய்த போலீசார் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். செய்த குற்றங்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் 15,000 திர்ஹம்ஸ் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் தண்டனை காலம் முடிவடைந்த பிறகு அவரை நாடு கடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.