அபுதாபியில் போதைப் பொருட்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுக்கப்படும் மருந்துகளை ஒருவர் சட்ட விரோதமாக விற்றுவந்துள்ளார். அதுவும் வாட்சாப்பில் போதைப் பொருட்களை டீல் பேசி முடித்திருக்கிறார்.
அமீரகத்தின் வேறு எமிரேட்டில் வசிப்பவர் மூலமாக அதிக அளவிலான போதைப்பொருட்கள் இவருக்குக் கிடைப்பதாக அபுதாபி காவல்துறைக்குத் தகவல் கிடைத்திருக்கிறது.
ரகசிய ஆப்பரேஷன் நடத்திய காவல்துறை குற்றவாளியை பிடித்திருக்கிறது. அப்போது அவரிடத்தில் போதைப்பொருட்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுக்கப்படும் மருந்துகள் இருந்திருக்கின்றன.
விசாரணையில் அவர் வாட்சாப் மூலமாக அமீரகத்தில் போதைப்பொருள் வியாபாரம் செய்துவந்தது தெரியவந்திருக்கிறது. பொது வழக்குத்துறை இவரை அபுதாபி கிரிமினல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் குற்றவாளிக்கு மரணதண்டனை விதிப்பதாகத் தெரிவித்தனர். மேலும், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் அழிக்கப்பட வேண்டும் எனவும் அவர் பயன்படுத்திய வாகனம் மற்றும் செல்போன் ஆகியவை கைப்பற்றப்பட வேண்டும் என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.