அஜ்மானில் அல் ஸவ்ரா ரவுண்டாவிற்கு எதிரே அமைந்துள்ள ஃபெஸ்டிவல் லேண்டில் புதிய கொரோனா மையம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இங்கு தடுப்பூசி, PCR மற்றும் DPI பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தினசரி 10,000 பேருக்கு சேவை வழங்கிட 70 க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
தேவை அதிகரிக்கும்பட்சத்தில் பணியாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 24×7 மணிநேரமும் இயங்கும் இந்த மையத்தில் PCR பரிசோதனை 75 திர்ஹம்ஸ் மற்றும் DPI பரிசோதனை 50 திர்ஹம்ஸ் கட்டணத்திலும் மேற்கொள்ளப்படுகிறது.
PCR பரிசோதனை முடிவுகளை 24 மணிநேரத்திலும் DPI பரிசோதனை முடிவுகளை 3 நிமிடங்களிலும் இங்கே பெறலாம். எதிர்வரும் காலங்களில் PCR முடிவுகளை 12 மணிநேரத்தில் வெளியிட இருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்துப் பேசிய டாமோ ஹெல்த்கேர் நிறுவனத்தின் வெளித் தளங்களுக்கான இயக்குனர் முபாரக் சைஃப் அல் கெட்பி,” அஜ்மான் தொழில்துறைப் பகுதிகளில் உள்ள தொழிலாளர்களுக்கு இந்தத் திட்டம் பயனுள்ள வகையில் இருக்கும். அஜ்மான் மற்றும் வடக்கு எமிரேட்களில் வசிக்கும் எவரும் இங்கே கொரோனா தடுப்பூசி மற்றும் பரிசோதனைகளை எடுத்துக்கொள்ளலாம்” என்றார்.
அதேபோல விசிட்டிங் விசாவில் அமீரகம் வந்தோரும் இங்கே கொரோனா பரிசோதனையை எடுத்துக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய ஒருங்கிணைந்த விசா எண்ணின் மூலமாக (unified visa number) அவர்களுடைய பரிசோதனை முடிவுகள் அல் ஹோசன் அப்ளிகேஷனில் வெளியிடப்படும் என கெட்பி குறிப்பிட்டார்.