அமீரகத்திற்கு வரும் ஒவ்வொரு இந்தியரின் கனவும் சொந்த ஊரில் ஒரு வீடு கட்ட வேண்டும்; குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும் என்பதாகத்தான் இருக்கும். ஆனால், அமீரகத்தில் கஷ்டப்படும் தொழிலாளர்களின் பசியைப் போக்க, இந்தியாவில் இருந்த தனது வீட்டை விற்று, குறைந்த கட்டணத்தில் சாப்பாடு வழங்கி வருகிறார் இந்தியாவைச் சேர்ந்த ஆயிஷா.
கணினிப் பொறியியல் முடித்துவிட்டு, துபாய் அரசுப் பதவியில் நல்ல சம்பளத்தில் இருந்த ஆயிஷா தற்போது அந்த வேலையே உதறிவிட்டு, அஜ்மானில் ஃபுட் ஏடிஎம் (Food ATM) என்னும் உணவகத்தை நடத்தி வருகிறார்.
3 திர்ஹம்ஸ்-ல் சாப்பாடு. அதாவது ஒரு நாளைக்கு 9 திர்ஹம்ஸ் செலவில் காலை, மதியம் மற்றும் இரவு சாப்பாட்டை முடித்துக்கொள்ளலாம். விலை குறைவு என்பதால் உணவை சந்தேகிக்க வேண்டாம். பிரியாணி, சிறிய கப்பில் தயிர், ஊறுகாய்கள் மற்றும் ஓர் இனிப்பு ஆகியவை மதியத்திற்கு வழங்கப்படுகிறது.

வாரத்தின் 7 நாட்களுக்கும் 7 வகையான இனிப்புகள் வழங்கப்படுகின்றன. ஒரு நாளைக்கு துபாய், ஷார்ஜா மற்றும் அஜ்மானில் சுமார் 2700 தொழிலாளர்களுக்கு உணவுகளை விநியோகம் செய்துவருகிறது ஆயிஷாவின் Food ATM உணவகம். 17 பேர் பணிபுரியும் இந்த உணவகத்திற்கு காலை 3 மணிக்கு சென்றால் கூட உங்களுக்கு உணவு கிடைக்கும். “யாரும் பசித்த வயிறோடு இருக்கக் கூடாது” என்கிறார் ஆயிஷா.
கடந்த 2019 ஆம் ஆண்டு, துபாயில் அரசு வேலையை ராஜினாமா செய்துவிட்டு, குறைந்த விலையில் தொழிலாளர்களுக்கு உணவளிக்க இருப்பதாக தனது குடும்பத்தாரிடம் ஆயிஷா தெரிவித்திருக்கிறார். நினைத்தது போலவே, திசையெங்கும் எதிர்ப்புகள். ஆனால், அவரது கணவர் ஆயிஷாவின் முயற்சிக்கு ஆதரவளித்திருக்கிறார். மும்பையில் இருந்த வீட்டை விற்று அந்தப் பணத்தைக்கொண்டு உணவகம் ஆரம்பிக்கும் வேலையில் இறங்கியிருக்கிறார்.
ஒரு நிமிடம். அரசு வேலை. அதுவும் துபாயில். சராசரி இந்திய தொழிலாளியால் நினைத்துப் பார்க்க முடியாத சம்பளத்தைத் தரும் வேலையை வேண்டாம் எனச் சொல்ல ஆயிஷவால் எப்படி முடிந்தது? இதற்கு அவர் சொன்ன பதில் அபாரமானது.

“எங்களுடைய அலுவலகத்தில் எப்போதும் உணவுகளை பரிமாறிக்கொள்வோம். நான் சில தொழிலாளர்களுக்கும் சேர்த்து உணவு எடுத்துச் செல்வேன். அப்படி வழக்கமாக எங்களது அலுவலகத்தில் பணிபுரிந்த தொழிலாளி ஒருவருக்கு உணவு கொடுத்தேன். அவர் தனது பர்சில் இருந்த ஒரு புகைப்படத்தை எடுத்துக் காட்டினார். அது அவரது குழந்தையின் படம். அவளுடைய படிப்பிற்காகத்தான் நான் இங்கே கஷ்டப்பட்டு பணம் அனுப்புகிறேன் என அவர் தெரிவித்தார். அதற்காகவே உணவுக்கு கூட பெரிதாக பணம் எடுத்துக்கொள்வதில்லை எனச் சொன்னார். அவருக்கு ஊதியமும் குறைவு. அப்படியானால் அமீரகம் முழுவதும் எத்தனை பேர் இருப்பார்கள்? எனத் தோன்றியது. நான் உணவகம் துவங்க முடிவெடுத்தேன்” என்றார்.
உரிமம் வாங்குவது, தொழிலாளர்களுக்கு தங்குமிடம், உணவு என மொத்தம் 4.5 லட்சம் திர்ஹம்ஸ் செலவில் Food ATM உருவாகியிருக்கிறது. அதன்பின்னர் எல்லாமே வெற்றிதான். இப்போது தொழிலாளர்களிடையே ஆயிஷா மிகவும் பிரபலமானவர்.
Food ATM -ல் வழங்கப்படும் கார்டில் ரீசார்ஜ் செய்துகொண்டால் மாதம் முழுவதும் அதனைப் பயன்படுத்திக்கொள்ளலாம். சம்பளம் கிடைத்தவுடன் வீட்டிற்கு அனுப்பிவிட்டு உணவுக்கே கஷ்டப்படும் தொழிலாளர்கள் பலரது பசியை ஆயிஷா போக்கிவருகிறார்.

சமீபத்தில் துபாயில் உள்ள தனியார் பள்ளி குழந்தைகளுக்கு உணவளிக்கும் ஒப்பந்தத்தை ஆயிஷா பெற்றிருக்கிறார். அதேபோல, தனியார் நிறுவனங்கள் தங்களது தொழிலாளர்களது உணவுத் தேவைக்கும் இந்த உணவகத்தை நாடுகின்றனர்.
இதுபற்றிப் பேசுகையில்,” பல தொழிலாளர்கள் தங்களது மனைவி அல்லது அம்மாவின் சமையலை நினைத்து ஏங்குவதைப் பார்த்திருக்கிறேன். அமீரக உணவகங்களில் விற்கப்படும் உணவுகளின் விலைகளை இவர்களால் கொடுக்க இயலாது. ஆகவே, அவர்களுக்கு குறைந்த விலையில் வயிறார சுவையான உணவினை அளிக்க விரும்பினேன். அதுதான் விதை. இன்று நீங்கள் மரத்தினைப் பார்க்கிறீர்கள். இன்னும் அதிக ஒப்பந்தங்கள் கிடைத்தால் கூடுதல் தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள்” என்கிறார் உற்சாகமாக.
இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் மற்றும் தெற்காசிய மக்களின் பாரம்பரிய ருசியிலும் இங்கே உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. ஒருநாளைக்கு 8 விதமான உணவுகள் இங்கே தயார் செய்யப்பட்டு வாகனம் மூலமாக விநியோகம் நடைபெற்றுவருகிறது.

“சமூகத்திற்கு நாம் என்ன செய்திருக்கிறோம்? என்ற கேள்வி என்னைப் பலநாள் தூங்கவிடாமல் செய்திருக்கிறது. நல்ல வேலையை விட்டுவிட்டு, இத்துணை பெரிய முயற்சியில் இறங்க எனது கணவர் உறுதுணையாக இருந்தார். அமீரகத்தில் 30 சதவீத நிறுவனங்கள் நீல நிறக் கழுத்துப்பட்டை தொழிலாளர்களை பணியில் வைத்திருக்கிறது. அவர்களின் உணவுத்தேவைக்காக நாங்கள் பாடுபட்டுவருகிறோம். எங்களுடைய குறிக்கோள் ஒன்றுதான். அனைவருக்கும் குறைவான விலையில் வயிறார சாப்பாடு கிடைக்கவேண்டும் என்பதுதான்” என்கிறார் 45 வயதான ஆயிஷா.
நம்பிக்கை முரசு கொட்டி, லட்சியக் குதிரையில் பறக்கும் ஆயிஷாவின் முயற்சி நிச்சயம் பாராட்டப்படவேண்டியது. ஊர், உறவுகள் என மனத்திற்கு நெருக்கமான அனைத்தையும் விட்டுவிட்டு அமீரகத்தில் தவிக்கும் தொழிலாளர்களில் பலருக்கும் உணவளிக்கும் தாயாக மாறியிருக்கிறார் ஆயிஷா.
