அமீரகத்தின் துணைப் பிரதமரும் உட்கட்டமைப்புத்துறை அமைச்சருமான லெப்டினன்ட் கர்னல் ஷேக் சைஃப் பின் சயீத் அல் நஹ்யான் (Sheikh Saif bin Zayed Al Nahyan) அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி நேற்று செலுத்தப்பட்டது.
தடுப்பூசி பெற்றுக்கொண்ட புகைப்படத்தை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு,” மருத்துவர்களுக்கும், தடுப்பூசி எடுத்துக்கொள்பவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அனைவரும் பாதுகாப்புடன் இருக்க நான் விரும்புகிறேன்” எனவும் குறிப்பிட்டுள்ளார் அல் நஹ்யான்.
أشكر الطاقم الطبي والقائمين على التطعيم
أتمنى السلامة للجميع#تم_التطعيم pic.twitter.com/NR8zSMS4q1— سيف بن زايد آل نهيان (@SaifBZayed) October 19, 2020
கொரோனாவிற்கான தடுப்பூசி குறித்த மூன்றாம் கட்டத்தின் ஆய்வுகள் அமீரகத்தில் நடைபெற்றுவந்த நிலையில் கொரோனாவினால் பாதிக்கப்பட அதிகமான வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் முன்னணி சுகாதாரப் பணியாளர்களுக்கு இத்தடுப்பு ஊசியை அளிக்க அமீரக அரசு சமீபத்தில் அனுமதியளித்தது.
இதன் நீட்சியாக அபுதாபி பள்ளி ஆசிரியர்கள், ஷார்ஜா விமான நிலைய அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு கொரோனா தடுப்பூசி அளிக்கப்பட்டிருக்கிறது.
இந்த மூன்றாம் கட்ட சோதனையை அபுதாபியை மையமாகக்கொண்டு இயங்கும் குரூப் 42 மற்றும் சீனாவின் மருந்தக துறை ஜாம்பவானான சினோபார்ம் (Sinopharm) ஆகியவை இணைந்து மேற்கொண்டுவருகின்றன.
அமீரகத்தின் முக்கிய தலைவர்கள் பலருக்கும் இந்த கொரோனா தடுப்பு மருந்தானது அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.