UAE Tamil Web

அமீரகம்: செல்போனை ரிப்பேர் செய்ய கடையில் கொடுத்த பெண் – கசிந்த புகைப்படங்கள்..!

CELPHONE

வளைகுடா நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பரப்புவேன் என மிரட்டல் விடுத்த செல்போன் டெக்னீசியன் மீதான வழக்கு இன்று ஷார்ஜா குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

திருடப்பட்ட புகைப்படங்கள்

செல்போனை ரிப்பேர் செய்ய கடையில் கொடுக்கச் சென்றிருக்கிறார் அந்தப்பெண். போனைப் பெற்றுக்கொண்ட குற்றம் சாட்டப்பட்ட இளைஞர், அதிலிருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது கணினியில் சேமித்துவைத்துள்ளதாக அந்தப் பெண் அளித்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போனைப் பெற்றுக்கொண்ட சில நாட்களில் இளைஞரிடமிருந்து பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு போன்கால் வந்திருக்கிறது. அப்போது 20,000 திர்ஹம்ஸ் பணம் வேண்டும் எனவும் அதன்மூலமாக தனது வங்கிக்கடனை அடைக்கவேண்டும் என்றும் இளைஞர் தெரிவித்திருக்கிறார்.

பணம் தர முடியாது என பெண் கூறியிருக்கிறார். அடுத்தகணமே அப்பெண்ணின் போனிற்கு சில புகைப்படங்கள் வந்திருக்கின்றன. அவை அவருடைய் புகைப்படங்கள் தாம். பணம் தரவில்லை என்றால் இப்புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என இளைஞர் மிரட்டியிருக்கிறார்.

போன் மூலமாக தொடர்பு கொண்டதாக ஒப்புக்கொண்ட இளைஞர் மற்ற குற்றச்சாட்டுக்களை மறுத்திருக்கிறார். மேலும், இளைஞர் தன் தரப்பு வாதத்தை முன்வைக்க மே மாதம் வரையில் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.