UAE Tamil Web

போதைப்பொருளுக்கு அடிமையான மகனிடம் இருந்து என்னைக் காப்பாற்றுங்கள் – காவல்துறைக்கு போன் செய்த தாய்..!

jail

போதை பழக்கத்திற்கு அடிமையான இளைஞன் ஒருவன் தனது குடும்பத்தையே கொலை செய்து விடுவதாக மிரட்டிய காரணத்தினால் அவனது தாயார் துபாய் காவல் நிலையத்தில் தன் மகனை குறித்து புகார் தெரிவித்துள்ளார்.

அரபு வம்சாவளியைச் சேர்ந்த இந்த இளைஞன் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளான். அவனது குடும்பத்தினர் அவனை மறுவாழ்வு மையத்தில் சேர்ப்பதற்கு பதிலாக அவனை வீட்டிலேயே தனிமைப்படுத்தி வைக்க முயற்சி செய்துள்ளனர். இதனால் கோபம் கொண்ட அவன் வீட்டில் உள்ள அனைவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளான்.

குடும்பத்தினர் இந்த இளைஞனை அதிக நாட்கள் வீட்டில் தனிமையில் அடைத்து வைத்துள்ளனர். அதிக நாட்கள் போதைபொருள் பயன்படுத்தாத காரணத்தினால் அவனது உடல் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து போதைப்பொருள் வாங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்ட அவன், தனது தாயாரிடம் பணம் மற்றும் கார் சாவியை கேட்டுள்ளான். அதற்கு தாயார் மறுப்பு தெரிவிக்கவே வேகமாக வீட்டின் சமயலறைக்கு சென்று அங்கிருந்த கத்தியை எடுத்து வந்து அவனது தாய் தந்தையையும், உடன் பிறந்தவர்களையும் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளான்.

உடனே இளைஞரின் தாயார் அபுதாபி காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அந்த இளைஞன் கையில் கத்தியுடன் இருப்பதை கண்டுள்ளனர். கத்தியைக் கீழே போட்டுவிட்டு சரணடையுமாறு காவல்துறையினர் அவனை வற்புறுத்தி உள்ளனர். ஆனால் அவனோ அந்த இடத்தில் இருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளான். உடனடியாக அவனை மடக்கிப் பிடித்த காவல்துறையினர் அவன் அறையில் இருந்து போதைப்பொருள் பயன்படுத்திய ஆதாரத்தையும் கைப்பற்றினர்.

அதன் பின்னர் அந்த இளைஞன் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் போதைப்பொருள் பயன்படுத்தியது நிரூபிக்கப்பட்டது.

விசாரணையின்போது இளைஞர் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதற்கு முன்னர் ஒரு நாள் போதை பொருளை பயன்படுத்தி காரை வேகமாக ஓட்டியதையும் ஒப்புக் கொண்டார். இதைத்தொடர்ந்து அவனை மறுவாழ்வு மையத்திற்கு அழைத்து சென்று போதை பழக்கம் குணமாக சிகிச்சை அளிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தனது குடும்ப உறுப்பினர்களை கொலை செய்வதாக அச்சுறுத்தியது மற்றும் அவர்களை உடல் ரீதியாக துன்புறுத்திய காரணத்தினால் அவனுக்கு இரண்டு வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அத்தோடு போதைப்பொருளை பயன்படுத்தி வாகனம் ஓட்டிய காரணத்தினால் அவனுக்கு 20,000 திர்ஹம்ஸ் அபராதமும் விதிக்கப்பட்டது.

மேலும் அவனது ஓட்டுனர் உரிமம் ஒரு வருடத்திற்கு இடைநிறுத்தம் செய்யப்பட்டதுடன் ஓட்டுனர் உரிமம் காலாவதியாகும் போது அதை புதுப்பிக்கவும் தடைவிதிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த இளைஞன் கொடுக்கப்பட்ட இந்த தீர்ப்பை எதிர்த்து அபுதாபி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளான். இதனால் அவனது சிறை தண்டனை இரண்டு ஆண்டுகளில் இருந்து மூன்று மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் 20,000 திர்ஹம்ஸ் அபராதத்தை கண்டிப்பாக செலுத்த வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓட்டுநர் உரிமம் காலாவதியாகும் போது புதுப்பிப்பதற்கு விதிக்கப்பட்ட தடையும் நீக்கப்பட்டுள்ளது.

jail
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap