இந்தியாவிற்கும் அமீரகத்திற்குமான உறவு, அமீரகம் உருவாவதற்கு முன்பிருந்தே இருந்திருக்கிறது. வேலைவாய்ப்பு மற்றும் வணிகம் செய்வதற்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்தியர்கள் அமீரகத்திற்கு பயணமாகியுள்ளனர். இந்த உறவுக் கொடி பல்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த தலைவர்களினாலும் பாதிக்கப்படாமல் செழித்து வளர்ந்திருக்கிறது. அதற்கு ஓர் எடுத்துக்காட்டுத்தான் ஸ்ரீ நாத்ஜி ஹவேலி கோவில் (கிருஷ்ணர் கோவில்).
சகிப்புத்தன்மைக்கான அமைச்சகத்தை உருவாக்கிய உலகின் முதல் நாடு அமீரகம் என்பது ஒருபுறம் இருந்தாலும், 1935 ஆம் ஆண்டே புர் துபாய் பகுதியில் இந்த ஸ்ரீ நாத்ஜி ஹவேலி வழிபாட்டுப்பகுதி இருந்திருக்கிறது. அப்போதிருந்த பழங்குடியினத் தலைவர்கள் இந்து மக்களது வழிபாட்டுத் தேவைகளுக்கு வேண்டிய உதவிகளைச் செய்திருக்கிறார்கள்.
இந்தக் கோவிலின் தலைவரான லலித் கராணி இதுகுறித்துப் பேசுகையில்,” உள்ளூர் வாசிகள் இந்தக் கோவில் 1902 ஆம் ஆண்டுமுதல் இருந்ததாக உறுதியாகக் கூறுகிறார்கள். ஸ்ரீ நாத்ஜி ஹவேலி கோவிலுக்குச் செல்லும் பாதையின் பழைய புகைப்படம் (மேலே கொடுக்கப்பட்டுள்ளது) இன்னும் கோவில் நிர்வாகத்திடம் உள்ளது” என்றார்.
“கோவிலுக்கு அருகே மசூதியும் இருக்கிறது. இரண்டு இடங்களிலும் வழிபாட்டு நேரங்கள் கிட்டத்தட்ட ஒரேமாதிரியாகத் தான் இருக்கும். ஆனால் அது இருபெரும் மதங்களின் புனிதத்திற்கோ வழிபாட்டு சடங்குகளுக்கோ தடையாக இருந்ததில்லை. அமீரகம் ஏன் சகிப்புத்தன்மைக்கான நாடு என்றழைக்கப்படுகிறது என்றால் அதற்குக்காரணம் இதுதான்” என லலித் தெரிவித்தார்.
பழைய இடத்தில் சிறிய வீடு ஒன்றில் கிருஷ்ணர் கோவில் இருந்திருக்கிறது. பின்னரே அது விரிவாக்கப்பட்டிருக்கிறது. முன்பு அவ்விடத்தில் பசுமாடும் கிணறும் இருந்ததாக லலித் குறிப்பிட்டார். வணிகர்கள் ஒவ்வொருநாள் காலையும் கோவிலுக்கு வந்து, இடத்தை தூய்மைப்படுத்தி பூஜைகள் நடைபெற்ற பிறகே தங்களது கடைகளைத் திறப்பார்கள் என லலித் தெரிவித்தார்.
அதேபோல, துபாய் க்ரீக் பகுதியைப் பார்த்தவாறு அமைந்துள்ள கடைகளின் மேல்தளத்தில் சிவன் வழிபாட்டுத்தலம் ஒன்றும் இருந்திருக்கிறது. மதத் தலைவர்கள் அளித்த தகவலின்படி துபாயின் தந்தை எனப் போற்றப்படும் ஷேக் ரஷீத் பின் சயீத் அல் மக்தூம் (Sheikh Rashid bin Saeed Al Maktoum) அந்நாளில் இந்திய சமூக மக்கள் விடுத்த அழைப்பின்பேரில் தீபாவளிப் பண்டிகையில் கலந்துகொள்வது வழக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(தீபாவளிப் பண்டிகையின் போது தமன்லால் இஸார்தாஸ் (Dhamanmal Issardas) இல்லத்தில் நடைபெற்ற விருந்தில் கலந்துகொண்ட ஷேக் ரஷீத் அவர்களின் புகைப்படம்.)

1957 ஆம் ஆண்டு கிருஷ்ணர் கோவில் அமைந்துள்ள நிலத்தின் ஆவணங்களை இந்திய மக்கள் தங்களுக்கான வழிபாட்டிற்கு பயன்படுத்திக்கொள்ளும் நோக்கத்துடன் இந்தியாவின் தட்டா சமூகத்தினரிடம் ஷேக் ரஷீத் அளித்ததாக கராணி தெரிவித்தார்.
“1957 ஆம் ஆண்டு சிறிய அளவில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்றன. அதன்பிறகு 40 வருடம் கழித்து துபாய் நகராட்சியிடம் அனுமதிபெற்று கோவிலின் வடிவத்தை மாற்றியமைத்தோம். இங்கிருக்கும் ஹாலில் 100 பேர் அமரலாம். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளுக்குட்பட்டு தீபாவளி போன்ற பண்டிகை தினங்களில் மக்கள் கோவிலுக்கு வர அனுமதியளித்த ஆட்சியாளர்களுக்கு நன்றி” என கராணி தெரிவித்தார்.
“என்னுடைய முந்தைய 4 தலைமுறைகள் இங்கே தான் இருந்தன. அமீரக யூனியன் ஒன்றினையும் போது நாங்கள் அதனை மகிழ்ச்சியாக பார்த்திருந்தோம். இந்நகரத்தின் வளர்ச்சியை நாங்கள் கண்கூடாகப் பார்த்துவருகிறோம். வெளிநாட்டிலிருந்து வந்தவர்களாக இருந்தாலும் இதுவும் எங்களுக்கு தாயகம் தான். அமீரகத்திற்காகவும் அதன் ஒப்பற்ற தலைவர்களுக்காகவும் நாங்கள் பிரார்த்திக்கின்றோம்” என கராணி தெரிவித்தார்.
இந்தியப் பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று அபுதாபியில் இந்து கோவில் கட்ட அமீரக அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது. இங்கு கட்டப்பட்டுவரும் கோவில் பற்றி விரிவாக அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
இப்படி, சீக்கியர்களின் குருத்வாராக்கள், கிறிஸ்துவர்களின் தேவாலயங்கள் என பல்வேறு மதத்தினைச் சேர்ந்த மக்களுக்குமான நாடாக, சமத்துவத்திற்கான நாடாக அமீரகம் திகழ்கிறது.