UAE Tamil Web

போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத்தில் 50 சதவிகித தள்ளுபடி அளிக்கும் 5 எமிரேட்கள் – அடுத்தடுத்து வெளிவந்த அறிவிப்பு..!

trafffic fine

அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டு அதற்காக விதிக்கப்பட்ட அபராதக் கட்டணங்களில் 50 சதவிகித தள்ளுபடி அளிக்கும் திட்டம் இதுவரையிலும் 5 எமிரேட்களின் காவல்துறைகளால் துவங்கப்பட்டுள்ளது.

- Advertisment -

ஏற்கனவே அஜ்மான் மற்றும் ராஸ் அல் கைமாவில் இந்த அபராத தள்ளுபடி குறித்த அறிவிப்பு வெளிவந்த நிலையில் தற்போது புஜைரா, உம் அல் குவைன் மற்றும் ஷார்ஜா ஆகிய எமிரேட்களிலும் இத்தகைய தள்ளுபடி அளிக்கும் திட்டம் அமலுக்கு வர இருக்கிறது.

உம் அல் குவைன்

டிசம்பர் 2 ஆம் தேதி அமலுக்கு வரும் இந்த 50 சதவிகித அபராதத் தள்ளுபடித் திட்டம் ஜனவரி 2 ஆம் தேதி வரையில் நடைமுறையில் இருக்கும் என உம் அல் குவைன் காவல்துறையின் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் ஷேக் ரஷீத் பின் அகமது அல் முஅல்லா (Sheikh Rashid bin Ahmed Al Mualla) தெரிவித்துள்ளார்.

அனைத்து கரும்புள்ளிகள் மற்றும் வாகனப் பறிமுதலுக்கான அபராதமும் தள்ளுபடி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 2 ஆம் தேதிக்கு முன்னர் பதிவான அனைத்து போக்குவரத்து விதிமீறலுக்கும் இந்தத் தள்ளுபடி பொருந்தும் என மேஜர் தெரிவித்தார். மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தவும் மக்களின் பொருளாதார சுமைகளை குறைக்கவும் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வருவதாக மேஜர் ஜெனரல் தெரிவித்தார்.

ஷார்ஜா

ஆபத்தான போக்குவரத்து விதிமீறல்கள் தவிர மற்ற போக்குவரத்து அபராதங்களுக்கு 50 சதவிகித தள்ளுபடி அளிக்கப்படும் என ஷார்ஜா காவல்துறையின் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் சைஃப் அல் ஸாரி அல் ஷம்சி (Saif Al Zari Al Shamsi) தெரிவித்தார்.

டிசம்பர் 2 ஆம் தேதி நடைமுறைக்கு வரும் இந்த தள்ளுபடித் திட்டம் 49 நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தும் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும் என ஷம்சி தெரிவித்தார்.

புஜைரா

டிசம்பர் 1 ஆம் தேதிக்கு முன்னர் பதிவான அனைத்து விதமான விதிமீறல்களில் இருந்தும் 50 சதவிகிதம் தள்ளுபடி அளிக்கும் திட்டம் டிசம்பர் 2 – டிசம்பர் 15 ஆம் தேதிவரையில் நடைமுறையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து வகையான வாகனங்களுக்கும் விதிக்கப்பட்ட அபராதங்களில் இருந்தும் தள்ளுபடி வழங்கப்படும். அதேபோல பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களுக்கும் தள்ளுபடி உண்டு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“விதிமீறலில் ஈடுபட்ட வாகனவோட்டிகள் நலன் பெறும் நோக்கத்துடனும் குறிப்பாக அதிக அபராதத் தொகையுடன் கஷ்டப்படும் மக்களுக்கு உதவும் அடிப்படையில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது” என புஜைராவின் இளவரசர் ஷேக் முகமது பின் ஹமாத் அல் ஷார்கி (Sheikh Mohammed bin Hamad bin Mohammed Al Sharqi) தெரிவித்தார்.

மக்கள் அனைவருடைய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் அனைத்து வாகனவோட்டிகளும் சாலைப் போக்குவரத்து விதிகளை மதித்து செயல்படவேண்டும் என காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.