அமீரகத்தின் தலைவரும் அபுதாபியின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் கடந்த 50 வருடங்களில் மிகப்பெரிய சட்டத் திருத்தத்தை வெளியிட்டிருக்கிறார். இச்சட்ட திருத்தங்கள் ஜனவரி 2, 2022 ஆம் தேதிமுதல் அமலுக்கு வருகின்றன.
மொத்தம் 40 சட்ட திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. இதில் பெண்கள், குழந்தைகள் மீதான குற்றங்களைத் தடுக்கவும் சமூக பாதுகாப்பை மேம்படுத்தவும் சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அவை குறித்து கீழே காணலாம்.
அநாகரீகமாக நடந்துகொள்பவர்களுக்கு 10 ஆயிரம் திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும். இது ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் பொருந்தும்.
குற்றத்தின்போது கட்டாயப்படுத்துதல் மற்றும் அச்சுறுத்தலாக நடந்துகொள்பவர்களுக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகளும் அதிகபட்சம் 20 ஆண்டுகளும் சிறைத் தண்டனை வழங்கப்படும்.
18 வயதிற்கு உட்பட்டவர்கள், மாற்றுத் திறன் கொண்டவர்கள் மற்றும் தாக்குதலின்போது தடுக்க இயலாதவர்களின் மீது நிகழ்த்தப்படும் பாலியல் சீண்டல்களுக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகளும் அதிகபட்சம் 25 ஆண்டுகளும் சிறைத் தண்டனை வழங்கப்படும். மேலும், பணிபுரியும் இடம், கல்வி நிலையம், தங்குமிடம் ஆகிய இடங்களில் குற்றங்கள் நிகழ்ந்தால் அபராதமும் கடுமையாக்கப்படும்.
18 வயதிற்கு உட்பட்டவர்கள், மாற்றுத் திறன் கொண்டவர்கள் மற்றும் தாக்குதலின்போது தடுக்க இயலாதவர்களை பாலியல் வல்லுறவு செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனையும் அதிகபட்சமாக மரண தண்டனையும் விதிக்கப்படும்.
18 வயதிற்கு மேற்பட்டவர்களுடன் அவர்களுடைய சம்மதத்துடன் திருமணம் தாண்டிய உறவுகளில் ஈடுபடுபவர்களுக்கு 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும். இது குற்றத்தில் ஈடுபட்டவருடைய கணவன் அல்லது காப்பாளர் அளிக்கும் கிரிமினல் புகாரின் அடிப்படையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். ஒருவேளை அவர்கள் புகாரை வாபஸ் வாங்கினால் தண்டனை நிறுத்திவைக்கப்படும்.