UAE Tamil Web

முக்கியச் செய்தி: கடலில் கலந்த எண்ணெய்; கடற்கரைக்குச் செல்லவேண்டாம் என அரசு எச்சரிக்கை..!

oil spil

புஜைரா நகரத்தின் வடக்கு பகுதியில் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மர்பா நகரத்தில் அமைந்துள்ள கடற்கரை முழுவதும் எண்ணெய் கொட்டிக்கிடப்பதால் மக்கள் யாரும் அங்கே செல்லவேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

புஜைரா சுற்றுச்சூழல் ஆணையம் (FEA) மற்றும் புஜைரா நகராட்சி ஆகியவை இணைந்து கடல்நீரில் கலந்துள்ள எண்ணெயை அகற்றும் பணியினை கிட்டத்தட்ட முடித்துவிட்டனர். இருப்பினும் பணிகள் முழுமையாக முடிவடையும் வரையில் கடற்கரைப்பக்கம் மக்கள் செல்லவேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துப் பேசிய FEA வின் இயக்குனர் அசிலா அப்துல்லா அல் முவல்லா,”சுற்றுச்சூழல் அமைப்பு, நகராட்சி, தனியார் நிறுவனங்கள், துறைமுக நிர்வாகம் ஆகியவை இணைந்து இந்த எண்ணெய் கொட்டிய பரப்பினை சுத்தம் செய்துவருகின்றனர். இதனால் கடல்சார் சுற்றுச்சூழல் பாதிப்பினைச் சந்திக்கும் அபாயம் உள்ளதால் அதிகாரிகள் இவ்விஷயத்தில் அதீத முக்கியத்துவம் அளித்துவருகின்றனர்” என்றார்.

ஆயில் வெசல்கள் சர்வதேச தரத்தில் இல்லாததன் காரணமாக இம்மாதிரியான விபத்துகள் ஏற்படுகின்றன எனவும் இதனால் மீனவர்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு பெரியளவில் பாதிப்பு ஏற்படலாம் என அவர் தெரிவித்தார்.

எண்ணெய் மிதக்கும் பகுதிகள் அனைத்தும் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு தூயமைப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இம்மாதிரியான விபத்துகள் ஏற்படுத்தும் சேதம் குறித்தும் விளைவுகள் குறித்தும் கடற்படை வீரர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்திவருவதாக அவர் குறிப்பிட்டார்.

ஆகவே, குடியிருப்பாளர்கள் யாரும் தங்களுடைய சாகச பசியைப் போக்கிக்கொள்ள இந்தக் கடற்கரைக்கு செல்லவேண்டாம் என அவர் எச்சரித்தார்.