UAE Tamil Web

அமீரகம் – கத்தார் எல்லைகள் மீண்டும் திறப்பு: என்னதான் பிரச்சினை இந்த நாடுகளுக்குள்..?

Gulf_Cooperation_Council_AlUla

அமீரகம் – கத்தார் இடையேயான நில, வான் மற்றும் கடல் வழி எல்லைகளை நாளை முதல் திறக்க இருப்பதாக அமீரக வெளியுறவுத்துறை மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

சமீபத்தில் சவூதி அரேபியாவில் நடைபெற்ற வளைகுடா நாடுகள் ஒத்துழைப்புக் கவுன்சில் மாநாட்டில் எட்டப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இந்த முடிவினை அமீரகம் எடுத்திருக்கிறது. முன்னதாக, சவூதி அரேபியா கத்தார் உடனான தனது அனைத்து எல்லைகளையும் திறப்பதாக அறிவித்திருந்தது நினைவிருக்கலாம்.

இதுகுறித்துப் பேசிய அமீரக வெளியுறவுத்துறை மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகத்தின் துணைச்செயலாளர் காலித் அப்துல்லா பெல்ஹோல்,” சவூதி அரேபியாவின் அல் உலாவில் எட்டப்பட்ட அல் உலா உடன்படிக்கையின்படி ஜூன் 5, 2017 ஆம் தேதி எடுக்கப்பட்ட முடிவுகளை அமீரகம் கைவிடுகிறது” என அறிவித்திருக்கிறார்.

என்ன முடிவு என்கிறீர்களா? பார்த்துவிடுவோம் வாருங்கள்.

ஆட்சி, அதிகாரம்

பார்க்கப்போனால் சவூதி அரேபியாவிற்கும் கத்தாருக்கும் வரலாற்றில் பல இடங்களில் புகைச்சல் இருந்திருக்கிறது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தனித்து இயங்கும் கத்தாரின் எண்ணத்திற்கு கடிவாளம் போட நினைத்தது சவூதி. இதனை 2002 ஆம் ஆண்டு தனது தூதுவரை கத்தார் தலைநகர் தோஹாவில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்து ஆட்டத்தை ஆரம்பித்தது சவூதி.

அடுத்த 7 வருடங்களுக்கு கத்தாருக்கான தூதுவரை நியமிக்காமலேயே சவூதி கிடப்பில் போட்டது. சவூதியையே பகைத்துக்கொண்டு மத்திய கிழக்கில் யார் தயவில் இருக்க முடியும். ஆனால் அமெரிக்காவின் தயவு இருப்பதால் இறங்கி ஆடலாம் என கத்தார் நினைத்தது.

உலகின் மாபெரும் போராட்டமான அரபு வசந்தம் மத்திய கிழக்கை புரட்டிப்போட்ட நேரம் அதிகாரத்தின் தேவையும் மக்களின் ஆதரவும் ஓர் அரசுக்கு நிச்சயம் தேவை என அனைத்து நாடுகளுமே உணர்ந்திருந்தன. அப்போதுதான் சிரியாவில் போராட்டம் புதுவடிவம் பெற்றிருந்தது.

தீவிரவாதிகளுக்கு உதவி

சிரியாவில் பல தீவிரவாதக் குழுக்கள் பல்வேறு நாடுகளின் துணையுடன் களமிறக்கப்பட்டன. அல் கைதாவின் சிரியா கிளையான அல் நூஸ்ராவிற்கு உதவியது, ஈரானுடன் உறவுகளை புதுப்பித்துக்கொண்டது என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது சவூதி. இதன் காரணமாக 2014 ஆம் ஆண்டு சவூதி, அமீரகம், பஹ்ரைன், எகிப்து ஆகிய நாடுகள் கத்தாரில் இருந்து தங்களது தூதுவர்களை திரும்பப்பெற்றன. GCC அமைக்கப்பட்டதற்குப் பிறகு முதன்முறையாக இம்மாதிரியான சிக்கலை வளைகுடா நாடுகள் சந்தித்தன.

மத்திய கிழக்கு மாபெரும் குழப்பத்திற்கு தயாரானது. சொல்லப்போனால் ஒரு புயலுக்கு பிராந்தியம் தயாராகிக்கொண்டிருந்தது. அந்தப் புயல் இரண்டு வருடம் கழித்து மீண்டும் சிரியா உள்நாட்டுப் போரினால் வீசத் துவங்கியது.

பணயக் கைதிகள்

2017 ஆம் ஆண்டு ஏப்ரலில் கத்தார் அரசியல் மிகுந்த பரபரப்பாக இருந்தது. ஈராக் மற்றும் சிரியாவில் இயங்கிவந்த ஷியா தீவிரவாதக் குழுவினர் 26 கத்தார் மக்களை பணயக் கைதிகளாக சிறைபிடித்தனர். இதில் கத்தார் அரச குடும்பத்தினரும் அடக்கம். ஆடிப்போனது கத்தார்.

என்ன வேண்டும் எனக் கேட்டது கத்தார் அரசு. வேறென்ன பணம் தான் என்றன தீவிரவாதக் குழுக்கள். இதற்கிடையில் இன்னொரு சிக்கல் ஒன்றும் கத்தாருக்கு இருந்தது.

சிரியாவின் தலைநகரான டமாஸ்கசிற்கு வடமேற்கே உள்ள மதாயா என்னும் மலைப்பகுதியில் சிக்கித்தவிக்கும் மக்களை மீட்கவும் அவர்களுக்கு வேண்டிய உணவு மற்றும் மருத்துவப் பொருட்களை எடுத்துச்செல்ல தங்களை அனுமதிக்கவேண்டும் என தீவிரவாதக் குழுக்களிடம் தெரிவித்தது கத்தார்.

அப்படியே ஆகட்டும் அதற்கும் பணம் கொடுத்துவிடுங்கள் என சொல்லிவிட்டார்கள் உத்தமர்கள். இதில் கவனிக்கவேண்டியவை இந்த விஷயத்தில் பிரபல சன்னி தீவிரவாதக் குழுக்களான தஹ்ரிர் அல் ஷாம் மற்றும் அஹ்ரர் அல் ஷாம் போன்றவையும் கத்தாரை பணம் கேட்டு மிரட்டின என்பதுதான்.

வேறுவழியில்லாமல் கத்தார் பேரத்திற்குப் படிந்தது. ஈரான் உதவியுடன் ஈராக்கில் செயல்பட்டுவந்த ஷியா தீவிரவாதக் குழுக்களுக்கு 700 மில்லியன் அமெரிக்க டாலர்களையும் தஹ்ரிர் அல் ஷாம் அமைப்புக்கு 120–140 மில்லியனும் அஹ்ரர் அல் ஷாம் குழுவிற்கு 80 மில்லியன் டாலர்களையும் கத்தார் வழங்கியது.

கத்தார் அரசு ஊடகமான அல் ஜஸீரா, ஈரானுடைய நடவடிக்கைகளை கத்தார் ஏற்கும் வகையிலான செய்திகளை ஒளிபரப்பியது. பின்னர் அல் ஜஸீரா நிறுவனத்தினை ஹேக்கர்கள் ஹேக் செய்துவிட்டதாகவும் அரசுக்கும் இதுக்கும் சம்பந்தமுமில்லை என எமிர் தெரிவிக்க… இருங்கள் இத்தனை விபரங்கள் இங்கே தேவையில்லை. தீவிரவாத இயக்கங்களுக்கு பணம் கொடுத்தது சவூதி தலைமையிலான நாடுகளுக்கு பிடிக்கவில்லை. அதுதான் சிக்கலின் மையப்புள்ளி.

கொதித்தெழுந்த சவூதி ஆடிப்பார்த்துவிடலாம் என்றது. அதற்கும் சரி என்றது கத்தார். அமீரகம் உள்ளிட்ட சவூதி தலைமையிலான நாடுகள் கத்தாருடனான ராஜாங்க உறவுகளைத் துண்டித்துக்கொண்டது. இப்படித்தான் சிக்கல் தொடர்ந்தது.

ஓ..பழைய நண்பனே..

ஆனால், அத்தனை பகைகளையும் மறந்து அப்பாவி மக்களின் நலனையும், வளைகுடா நாடுகளின் ஒற்றுமையை உறுதிப்படுத்தவும் கத்தார் – சவூதி சுமூக பேச்சுவார்த்தைக்கு இணங்கின. எத்துணை பெரிய போராட்டங்களையும் ஒரு காத்திரமான பேச்சுவார்த்தையால் எளிதில் தீர்க்க முடியும் என்பதற்கு சமீபத்தில் சவூதியில் நடைபெற்ற GCC மாநாடும் ஒரு எடுத்துக்காட்டு என்பதனை இனி வரலாறு சொல்லிக்கொண்டே இருக்கும்.

துப்பாக்கிகளால் அமைதியைத் தர முடியாது, வன்முறையால் எளிய மக்களின் மனங்களை வென்றெடுக்க முடியாது என்பதை உணர்ந்து பல வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் கைகுலுக்கியிருக்கின்றன வளைகுடா நாடுகள்.

Gulf_Cooperation_Council_AlUla
0 Shares
Share via
Copy link