UAE Tamil Web

அமீரகத்தில் வேலைகளை பெற இந்த தவறை செய்து விடாதீர்கள்.! விரைவில் வருகிறது புதிய சட்டம்

law

அமீரகத்தில் வேலை பெற போலி பல்கலைக்கழக பட்டங்கள் மற்றும் போலி கல்விச் சான்றிதழ்களை பயன்படுத்தி சிக்குபவர்களுக்கு கடுமையான அபராதம் மற்றும் சிறைத் தண்டனைகளை அறிமுகப்படுத்த புதிய வரைவு சட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது. ஃபெடரல் நேஷனல் கவுன்சில் (FNC) இந்த புதிய ஃபெடரல் வரைவு சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.

அமீரகத்தில் வேலைகளைப் பெறுவதற்கு போலி கல்விச் சான்றிதழ்களைச் சமர்ப்பிப்பது அல்லது தகுதிவாய்ந்த அதிகாரிகளின் சான்றிதழ் அல்லது ஒப்புதலுக்காக போலி ஆதாரங்களை அளிப்பது போன்ற குற்றங்களை இச்சட்டம் உள்ளடக்கியது. நாட்டினுள் அல்லது வெளியில் இருந்து போலி கல்விச் சான்றிதழ்களை வழங்கும் எந்தவொரு அங்கீகரிக்கப்படாத நிறுவனத்தையும் விளம்பரப்படுத்தவோ அல்லது ஊக்குவிப்பதையும் புதிய விதிமுறைகள் தடை செய்கிறது.

போலி சான்றிதழ்களை தெரிந்தே ஏற்றுக் கொள்ளும் தேர்வாளர்கள் மற்றும் முதலாளிகளையும் இந்த புதிய வரைவு சட்டம் உள்ளடக்கியுள்ளது. புதிய சட்டத்தின் படி போலி பட்டங்கள் மற்றும் சான்றிதழ்கள் கொடுத்து பிடிபடுபவர்களுக்கு 30,000 முதல் 1 மில்லியன் திர்ஹம்ஸ் வரை அபராதம் மற்றும் 3 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

புதிதாக நிறைவேறியுள்ள இந்த வரைவுச் சட்டத்தின் கீழ், போலி சான்றிதழ்களை பயன்படுத்துபவர்கள் தங்கள் ஆவணங்களின் நம்பகத்தன்மை குறித்து தங்களுக்கு தெரியாது என்று கூறினாலும் கடுமையான தண்டனைகளை சந்திக்க நேரிடும். இவர்கள் 30,000 திர்ஹம்ஸ் அபராதம் மேலும் 3 ஆண்டுகள் வரை சிறைவாசம் அனுபவிக்க நேரிடும்.

கல்வி, கலாச்சாரம், விளையாட்டு மற்றும் தகவல் விவகாரங்களுக்கான FNC குழு – வரைவு சட்டத்தை ஒப்புதலுக்காக சபைக்கு முன்வைத்தது. மேலும் ஒரு சிறப்பு அரசாங்க அமைப்பை நிறுவ வேண்டும் என்றும் கல்வி சான்றிதழ் ஒரு உண்மையான நிறுவனத்தால் வழங்கப்பட்டதா இல்லையா என்பதை சரிபார்க்க ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தது.

புதிய சட்டத்திற்கு கல்வி அமைச்சர் ஹுசைன் பின் இப்ராஹிம் அல் ஹம்மாடி முன்னிலையில் FNC உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்தனர் கடந்த 2018-ஆம் ஆண்டில் அமீரகத்தில் 143 போலி கல்விச் சான்றிதழ்கள் கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இதனிடையே FNC உறுப்பினரும் கல்வி, கலாச்சாரம், விளையாட்டு மற்றும் தகவல் விவகாரங்களுக்கான குழுவின் உறுப்பினருமான சதா சயீத் அல் நக்பி, போலி சான்றிதழ்களை பயன்படுத்துவதற்கான நிகழ்வு சமீபமாக நாட்டில் அதிகரித்துள்ளது. இந்த போக்கை கட்டுப்படுத்தவே புதிய சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

புதிய விதிமுறைகள் அரசாங்க நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் அல்லது வேறு எந்த நோக்கங்களுக்காகவும் வேலை பெற போலி பட்டங்கள் மற்றும் கல்விச் சான்றிதழ்களைப் பயன்படுத்துவதைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்றும் சதா சயீத் குறிப்பிட்டார். போலி சான்றிதழ்களை சமர்ப்பித்து மோசடியில் ஈடுபடுவோருக்கு எதிரான இந்த புதிய வரைவுச் சட்டம் நாட்டில் அமல்படுத்தப்படுவதற்கு முன், அமீரக ஜனாதிபதி பெருமதிப்பிற்குரிய ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் அவர்களின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.