கனடாவைச் சேர்ந்த நிதி ஆலோசக குழுமமான ஆர்டன் கேப்பிடல் இந்த வருடத்திற்கான வலிமைவாய்ந்த உலகளாவிய பாஸ்போர்ட்களின் பட்டியலை (Global Passport Power Ranking) வெளியிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் அமீரகம் பல வருடங்களுக்குப் பிறகு முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதாவது ஒரு நாட்டின் பாஸ்போர்ட் மட்டுமே கொண்டு எத்தனை நாடுகளுக்கு விசா எடுக்காமலேயே பயணிக்கலாம் என்பது இந்தப் பட்டியல் தயாரித்தலில் மிகமுக்கிய பங்காற்றியிருக்கிறது. இதனை மொபிலிட்டி ஸ்கோர் என்கிறார்கள். அதன்படி அமீரகத்தின் மொபிலிட்டி ஸ்கோர் 152 ஆகும்.
அதாவது அமீரகத்திலிருந்து 98 நாடுகளுக்கு நீங்கள் சுற்றுலா விசாகூட எடுக்காமல் பயணிக்கலாம். கூடுதலாக 54 நாடுகளுக்கு ஆன்லைன் மூலமாகவோ அல்லது பயணத்தின்போதோ விசா எடுத்துக்கொள்ளலாம். அமீரகம் கடந்த 2018, 2019 ஆகிய வருடங்களில் இப்பட்டியலில் முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பட்டியல் தயாரித்தலில் ஒவ்வொரு நாட்டிலும் பயணத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கின்றன. இதனடிப்படையில் உலகின் வலிமையான அதாவது அதிக மொபிலிட்டி ஸ்கோர்களைக் கொண்டுள்ள டாப் 10 நாடுகளின் பட்டியல் மற்றும் அவற்றின் மொபிலிட்டி ஸ்கோர்களைக் கீழே காணலாம்.
- அமீரகம் – 152
- நியூசிலாந்து – 146
- ஜெர்மனி, பின்லாந்து, ஆஸ்திரியா, இத்தாலி, லக்சம்பர்க், ஸ்பெயின், இத்தாலி, சுவிட்சர்லாந்து, தென் கொரியா, ஆஸ்திரேலியா – 144
- ஸ்வீடன், நெதர்லாந்து, டென்மார்க், பெல்ஜியம், போர்ச்சுகல், அயர்லாந்து – 143
- பிரான்ஸ், மால்டா, செக் குடியரசு, கிரீஸ், போலந்து, ஹங்கேரி, இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா – 142
- சிங்கப்பூர், நார்வே, ஸ்லோவேனியா, ஸ்லோவாக்கியா, ஜப்பான் – 141
- எஸ்டோனியா, லிதுவேனியா, லாட்வியா, ஐஸ்லாந்து – 140
- லிச்சென்ஸ்டீன் – 139
- குரோஷியா – 137
- ருமேனியா, பல்கேரியா, மொனாக்கோ – 136
