UAE Tamil Web

இனி அமேசான் மூலமாக எதிசலாட் மற்றும் டூ சிம்கார்டுகளை ரீசார்ஜ் செய்யலாம்..!

Woman-phone_

அமீரகத்திற்கான அமேசான் குழுமத்துடன் அமீரகத்தின் தொலைத்தொடர்பு நிறுவனங்களான எமிரேட்ஸ் தொலைத்தொடர்பு குழும PJSC கம்பெனி (எதிசலாட்) மற்றும் ஒருங்கிணைந்த எமிரேட்ஸ் தொலைத்தொடர்பு நிறுவனம் (டூ) ஆகியவை புதிய ஒப்பந்தத்தை எட்டியுள்ளன.

- Advertisment -

இதன்மூலம் எதிசலாட் மற்றும் டூ ப்ரீபெய்டு சிம் கார்டுகளுக்கு அமேசான் ஷாப்பிங் ஆப் அல்லது அமேசான் இணையதளம் (Amazon.ae) மூலமாக ரீசார்ஜ் செய்துகொள்ளலாம். உங்களுடைய டெபிட், கிரெடிட் அல்லது Amazon.ae -ன் கிஃப்ட் கார்டு மூலமாக உங்களுக்கான ரீச்சார்ஜை மேற்கொள்ளலாம். அதேபோல உங்களுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் இந்த ஆப் மூலமாக ரீசார்ஜ் செய்துகொள்ளலாம். ஆங்கிலம் மற்றும் அரபு மொழிகளில் இந்த சேவை வழங்கப்படுகிறது.

“நாள்தோறும் மாறிவரும் வாடிக்கையாளர்களின் ரசனைகளை பூர்த்தி செய்யும் நோக்கோடு Amazon.ae போன்ற நிறுவனத்துடன் இணைந்து செயலாற்ற முடிவெடுத்துள்ளோம். இந்த ஆன்லைன் ரீசார்ஜ் வசதி மூலம் நாங்கள் வாடிக்கையாளர்களின் சவுகரியத்தை எப்படி மதித்து செயல்படுகிறோம் என்பது புலனாகிறது. வாடிக்கையாளர்கள் எளிமையான முறையில் ரீசார்ஜ் செய்யவும் பிற வசதிகளை அனுபவிக்கவும் நாங்கள் தொடர்ந்து Amazon.ae உடன் இணைந்து செயல்பட இருக்கிறோம்” என எதிசலாட் நிறுவனத்தின் தலைமை நுகர்வோர் அதிகாரியான காலித் எல்கூலி தெரிவித்தார்.

அமேசான் வாயிலாக ரீசார்ஜ் செய்வதன் மூலமாக உங்களுக்கான தினசரிப் பொருட்களின் டெலிவரியை நீங்கள் அட்டவணையிடலாம். இந்த திட்டம் சப்ஸ்கிரைப் & சேர் (Subscribe & Save) எனப்படுகிறது. அதேபோல அமேசான் ஹோம் சர்வீசஸ் எனப்படும் திட்டத்தின் மூலமாக 70 சேவைகளையும் பெற முடியும்.

மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவிற்கான அமேசான் நிறுவனத்தின் துணைத்தலைவர் ரொனால்டோ மோச்சாவர் இதுகுறித்துப் பேசுகையில்,” வாடிக்கையாளர்களின் தினசரித் தேவைகளை பூர்த்தி செய்யும் வழிகளையும், அவர்களுக்கான சிறந்த அனுபவங்களையும் வழங்க நாங்கள் முயற்சிக்கிறோம். இதன் நீட்சியாகவே Amazon.ae மூலமாக ரீசார்ஜ் செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.