UAE Tamil Web

ரமலான்: பாங்கு சொல்லப்பட்ட 5 வது நிமிடத்தில் இஷா தொழுகை: அரசு வெளியிட்ட வழிமுறைகள்..!

prayer

அமீரகத்தில் முறையான கட்டுப்பாடுகளுடன் தராவீஹ் சிறப்பு தொழுகையை மேற்கொள்ளுமாறு அரசு வலியுறுத்தியுள்ளது. துபாய் அதிகாரிகள் வெளியிட்டுள்ள விதிமுறைகளின்படி, பாங்கு சொல்லப்பட்டதிலிருந்து 5 நிமிடத்திற்குள் தராவீஹ் தொழுகை நடைபெற வேண்டும். தராவீஹ் மற்றும் இஷா தொழுகைகள் 30 நிமிடம் மட்டுமே நீடிக்கவேண்டும்.

அதிகாரிகள் வெளியிட்ட முழு விதிமுறைகள்

  • முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கவனமுடன் பிரார்த்தனையாளர்கள் பின்பற்றவேண்டும்.
  • கைகுலுக்குதல், அணைத்தல் போன்றவை தவிர்க்கப்படுதல் வேண்டும்.
  • தொழுகைக்கான அழைப்பான பாங்கு (அசான்) சொல்லப்பட்டதிலிருந்து தொழுகை நடந்து முடியும்வரை மசூதிகள் திறக்கப்பட்டே இருக்கும்.
  • மசூதிகளில் இஷா மற்றும் தராவீஹ் தொழுகைகள் நடத்த அதிகபட்சமாக 30 நிமிடங்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.
  • பாங்கு (அசான்) சொல்லப்பட்டதிலிருந்து 5 வது நிமிடம் இஷா தொழுகை நடைபெறும்.
  • பாங்கு (அசான்) சொல்லப்பட்டதிலிருந்து கட்டாய சபை தொழுகை (congregational obligatory prayer) நடந்து முடிவும் வரையில் மசூதிகள் திறந்தே இருக்கும்.
  • இரண்டாவது முறை மற்றும் தனியாளாக தொழுகை நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. பிரார்த்தனையாளர்கள் கூட்டமாக ஒன்றிணைவதைத் தவிர்த்தல் வேண்டும்.
  • தொழுகை முடிந்தவுடன் அனைத்து மசூதிகளும் உடனடியாக மூடப்படவேண்டும்.
  • மசூதிகளுக்கு வெளியே உணவு மற்றும் முகக்கவசம் உள்ளிட்ட எந்தப் பொருளையும் விநியோகிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • நெடுநாள் வியாதிகளால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உடையவர்கள் மசூதிகளில் தொழுகை நடத்துவதையும் கூட்டத்தில் பங்கேற்பதையும் தவிர்த்தல் வேண்டும்.
  • மசூதிகளில் விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகள் நடைபெற விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை தொடர்கிறது. இருப்பினும் விருப்பமுள்ள நபர்கள் காணொளிக் காட்சி மூலமாக விரிவுரைகளில் பங்கேற்கலாம்.
  • தொழுகை நடத்துபவர்கள் ஸ்மார்ட் சாதனங்கள் மூலமாக குரான் வாசிக்கவேண்டும்.
  • இப்தார் மற்றும் அன்பளிப்பு டெண்ட், இப்தார் டேபிள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனங்கள் மூலமாக மட்டுமே அன்பளிப்புகள் வழங்கப்பட வேண்டும்.