ஷார்ஜாவில் நடைபெற்றுவந்த தொல்பொருள் ஆராய்ச்சியில் அப்பாசித் வம்சத்தைச் சேர்ந்த பழங்கால இஸ்லாமிய நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஷார்ஜா தொல்பொருள் ஆராய்ச்சி ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்துப் பேசிய ஆணையத்தின் இயக்குனர் சபா அபௌத் ஜாசிம்,” துவக்க கால அப்பாசித் வம்சத்தினர் இப்பகுதியில் இருந்திருப்பது இந்த ஆய்வின் முடிவில் புலனாகிறது. மேலும் அப்பாசித் வம்சத்தினரின் காலத்தில் (9 அல்லது 10 ஆம் நூற்றாண்டு) செய்யப்பட்ட மண் பானைகளுக்குள் இந்த நாணயங்கள் இருந்தன” என்றார்.
அதுமட்டுமல்லாது மொரோக்கா, அல் ராய் மாகாணம், பெர்சியா, கோரசன் மாகாணம், ஆர்மீனியா, டிரான்சோக்சியானோ ஆகிய பகுதிகளின் நாணயங்களும் கிடைத்துள்ளன.
அப்பாசித் காலத்தில் அமீரகம் மற்றும் ஷார்ஜாவின் வரலாறு மற்றும் வணிகம் எப்படி இருந்தது என்பதை அறிய இந்த ஆய்வு முக்கிய திறப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரேபிய வளைகுடா மற்றும் அமீரகத்தின் வர்த்தக வழிகள் மூலமாக இந்த நாணயங்கள் இப்பகுதியில் பரவியிருக்கின்றன. ஆகவே, அக்காலகட்டத்தில் அமீரகம் முக்கிய வர்த்தக நகரமாக இருந்தது என்பது உண்மையாகிறது.
