மரபுசாரா ஆற்றல் மூலங்களில் இருந்து வணிக ரீதியில் தண்ணீரை உருவாக்கும் உலகின் முதல் திட்டம் அபுதாபியில் உள்ள மஸ்தார் பல்கலைக் கழகத்தில் இம்மாதம் துவங்க இருக்கிறது.
அமெரிக்காவின் AQUOVUM நிறுவனம், அபுதாபியின் மஸ்தார் மற்றும் கலீஃபா பல்கலைக்கழகத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை ஆகிய மூன்று அமைப்புகளும் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்த இருக்கின்றன.
வளிமண்டலத்திலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்கும் (AWG) இந்தத் தொழில் நுட்பம் எதிர்கால நிலையான தண்ணீர் திட்டங்களுக்கு நிச்சயம் உதவி புரியும் என நம்பப்படுகிறது. இம்மாதம் துவங்க இருக்கும் இந்தப் பணிகளின் போது AQUOVUM நிறுவனத்தின் திறன் என்ன என்பதை புதுப்பிக்கக்கூடிய ஆற்றம் மூலங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபுதாபியின் மஸ்தார் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள R&D மையம் தாக்குப்பிடிக்கக்கூடிய வகையிலான நீடித்த திட்டங்கள் குறித்து பல ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறது. அதில் இந்த வளிமண்டத்திலிருந்து புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் மூலங்களின் மூலமாக தண்ணீரைப் பிரித்தெடுக்கும் இம்முறை முக்கியமானதாக கருதப்படுகிறது.
உலக மக்கள் அனைவருக்கும் சுகாதாரமான குடிநீர் வழங்கும் ஐநாவின் இலக்கினை அடையவும் எதிர்காலத்தினை பசுமை மிகுந்ததாக மாற்றவும் கார்பன் இல்லா இந்த திட்டம் பெருமளவில் உதவி செய்யும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒருங்கிணைந்த வருடாந்திர வளர்ச்சி விகிதத்தையும் (CAGR) இந்த தொழில்நுட்பம் நேரடியாக பாதிக்கும் எனவும் இந்த திட்டத்தின் மூலம் உலகின் CAGR மதிப்பு 25 சதவீதம் அதிகரிக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இந்த சதவீதம் 35 ஆக உயரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 மாதங்கள் தொடர்ந்து நடைபெற இருக்கும் இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் தரவுகள் பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டு வருடத்தின் எந்த மாதங்களில் நீர் உற்பத்தி அதிகமாக இருக்கிறது என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.
