UAE Tamil Web

2 டோஸ் தடுப்பூசியையும் பெறாமல் அமீரகத்திலிருந்து வெளிநாட்டிற்குச் செல்லவேண்டாம் – அரசு வலியுறுத்தல்..!

Corona Vaccine

கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெறாமல் மக்கள் அமீரகத்திலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லவேண்டாம் என அமீரக அரசு அறிவுறுத்தியுள்ளது.

நேற்று நடைபெற்ற சிறப்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய அமீரக சுகாதாரத்துறையின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் டாக்டர்.ஃபரீதா ஹோசானி,” கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெறாதவர்கள் இந்த கோடைக்காலத்தில் அமீரகத்திலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லவேண்டாம். வெளிநாடு செல்பவர்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவேளையை கடைபிடித்தல் மற்றும் அவர்கள் செல்லும் நாடுகள் விதித்திருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்கவேண்டும்” எனத் தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில்,” கொரோனா தடுப்பூசியை அதிக அளவு எடுத்துக்கொள்ள சிலர் வலியுறுத்துகின்றனர். இது மருத்துவர்களின் பரிந்துரைக்கு எதிரானது. அதுமட்டுமல்லாமல் அது உடல்நிலைக்கு தீங்கு விளைவிக்கக்கூடும். ஆகவே மருத்துவரின் ஆலோசனைகளின்படி நடந்துகொள்ளும்படி நாங்கள் அறிவுறுத்துகிறோம்” என்றார்.

தடுப்பூசி பற்றிப் பேசிய அவர்,” கொரோனாவை இந்த தடுப்பூசிகள் முற்றலுமாக தடுக்காது எனினும், தீவிரத்தன்மையை கட்டுப்படுத்துதல், அவசநிலை சிகிச்சையை தவிர்த்தல், உயிரழப்பை குறைத்தல் ஆகியவற்றில் தடுப்பூசிகள் சிறப்பாக செயல்படுவது ஆய்வுகளின்மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது” என்றார்.

அமீரகத்தில் இதுவரையில் 71 சதவீதத்திற்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசியானது செலுத்தப்பட்டிருக்கிறது. தடுப்பூசி எடுத்துக்கொள்ள தகுதியானவர்களில் 91.8 சதவீதத்தினருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Corona Vaccine
0 Shares
Share via
Copy link