37.4 C
Dubai
August 10, 2020
UAE Tamil Web

இந்தியாவில் தவிக்கும் அமீரக குடியிருப்பாளர்கள் இந்தியாவிற்கு இயக்கப்படும் அமீரக விமானங்களின் மூலமாகவும் அமீரகத்திற்குத் திரும்பலாம்..!

dubai-airport_

ஜூலை 12 – 26 ஆம் தேதிகளில் வந்தே பாரத் திட்டத்தின் மூலம் அமீரகத்திலிருந்து இந்தியா செல்லும் சிறப்பு விமானங்கள் மற்றும் அமீரக விமான நிறுவனங்களின் விமானங்களின் வாயிலாக இந்தியாவில் சிக்கிக்கொண்ட அமீரக குடியிருப்பாளர்கள் அமீரகம் திரும்பும் திட்டத்திற்கு இந்திய மற்றும் அமீரக அரசுகள் ஒப்புதல் அளித்திருந்தன.

பின்னர் ஜூலை 26 ஆம் தேதியன்று, “மறு அறிவிப்பு வரும் வரையிலும் இந்தியா – அமீரகம் இடையிலான சிறப்பு விமான சேவைகள் தொடரும்” என துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் தகவல், பத்திரிக்கை மற்றும் கலாச்சாரத்துறை அதிகாரியான நீரஜ் அகர்வால் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அமீரகத்தில் இருந்து இந்தியாவிற்கு இயக்கப்படும் அமீரக விமான நிறுவனங்களைச் சேர்ந்த விமானங்கள் மூலமாக, இந்தியாவில் தவித்துவரும் அமீரக குடியிருப்பாளர்கள் அமீரகம் திரும்பலாம் என்னும் சிறப்பு விமான சேவைத் திட்டம் ஆகஸ்டு 15 ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்படுவதாக துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரக தலைமை அதிகாரி டாக்டர். அமன் பூரி தெரிவித்துள்ளார்.

அமீரகத்தில் உள்ள சமூக குழுக்கள் மற்றும் நிறுவனங்கள் அமீரக விமான நிறுவனங்களின் விமானங்கள் மூலமாக அமீரகத்தில் தவித்துவந்த இந்தியர்களை தாயகத்திற்கு அனுப்பி வந்தனர். இந்நிலையில், அமீரக விமான நிறுவனங்களே நேரடியாக இந்தியாவிற்கு விமானங்களை இயக்கவும், மீண்டும் இந்தியாவிலிருந்து அமீரகத்திற்கு மக்களை அழைத்து வரவுமே இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இந்தியா செல்லும் அமீரகத்தைச் சேர்ந்த விமான நிறுவனங்கள், அங்குள்ள அமீரக குடியிருப்பாளர்களை அழைத்துவர ஆகஸ்டு 15 ஆம் தேதிவரையில் அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக பூரி தெரிவித்திருக்கிறார்.

“அமீரகத்தில் தவித்துவரும் இந்தியர்களை தாயகம் அழைத்துச்செல்லும் நோக்கில் இந்தியாவிற்கு விமானங்களை இயக்க முன்வரும் அமீரக விமான நிறுவனங்களுக்கு நாங்கள் தடையில்லா சான்றிதழை (NoC) அளிக்கிறோம். இதுவரையில் பல அமீரக விமான நிறுவனங்களுக்கு NoC வழங்கப்பட்டிருக்கிறது. இந்தியாவிற்கு விமானங்களை இயக்க இருக்கும் அமீரக விமான நிறுவனம் ஒன்றிற்கு மட்டும் இதுவரையில் 57 விமானங்களுக்கான தடையில்லா சான்றிதழ் வழங்கியிருக்கிறோம். சிறப்பு விமானங்களை இயக்க இருக்கும் விமான நிறுவனங்களுக்கு நாங்கள் உரிய நேரத்தில் ஒப்புதலை வழங்குகிறோம்” என பூரி தெரிவித்தார்.

சமூக அமைப்புகள் அல்லது நிறுவனங்கள் சிறப்பு விமானங்களை இந்தியாவிற்கு இயக்குகின்ற தேவை இனிமேல் இருக்காது. பயணிகள் விமான நிறுவனங்களின் இணையதளம் மூலமாகவோ அல்லது டிராவல் ஏஜெண்ட்ஸ் மூலமாகவோ நேரடியாக இந்த விமானங்களுக்கான டிக்கெட் முன்பதிவினை செய்துகொள்ளலாம் என பூரி தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க.!