நடப்பாண்டின் முதல் 8 மாதங்களில் மதிப்பு கூட்டு வரி (value-added tax – வாட்) வருவாயில், 11.6 பில்லியன் திர்ஹம்ஸ் அதிகரித்துள்ளதாக அமீரக நிதி அமைச்சகம் கூறியுள்ளது.
2020 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலக்கட்டத்தில் கலால் வரி வருவாய், ஆண்டுக்கு 47% அதிகரித்து 1.9 பில்லியன் திர்ஹம்ஸ் ஆக இருந்தது என்றும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. நிதி அமைச்சக அதிகாரி சயீத் ரஷீத் யதீம், VAT வருவாயில் 30% ஃபெடரல் அரசிற்கும், 70% உள்ளூர் அரசுகளுக்கும் விநியோகிக்கப்படும் என்றார்.
இது பற்றி மேலும் தகவல் தெரிவித்துள்ள அவர், புகையிலை பொருட்களுக்கான கலால் வரி வருவாயில் ஃபெடரல் அரசின் பங்கு 45% மற்றும் உள்ளூர் அரசாங்கங்களின் பங்கு 55% ஆகும். எனர்ஜி பானங்கள், குளிர்பானங்கள் மற்றும் சர்க்கரை சேர்க்கப்பட்ட இனிப்பான பானங்கள் போன்ற பிற கலால் பொருட்களின் மீதான கலால் வரி வருவாயில் 30% ஃபெடரல் அரசின் பங்கு என்றார். அமீரக அரசின் திட்டங்களின்படி அபிவிருத்தி திட்டங்களை செயல்படுத்தவும், கோவிட் -19 தொற்றின் தாக்கத்தை குறைக்கவும் வரி வருவாய் உதவுகிறது என்று அல் யதீம் கூறினார்.
நிதிக் கொள்கை நோக்கங்கள் மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப சட்டங்கள் தொடர்ந்து புதுப்பிக்கப்படுவதை உறுதி செய்ய ஃபெடரல் வரி ஆணையத்துடன் (Federal Tax Authority) இணைந்து வரிக் கொள்கைகளை நிதி அமைச்சகம் தொடர்ந்து பின்தொடருவதாகவும் குறிப்பிட்டார். அமீரகத்தில் VAT-ஐ 5%-க்கும் அதிகமாக உயர்த்த அரசுக்கு எந்த திட்டமும் இல்லை தற்போது இல்லை என்றும் உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த 2018-ம் ஆண்டில் கிடைத்த வரி வருவாய் 29 பில்லியன் திர்ஹம்ஸுடன் ஒப்பிடும்போது, 2019-ம் ஆண்டில் கிடைத்த வரி வருவாய் சுமார் சுமார் 7% அதிகரித்து, 31 பில்லியன் திர்ஹம்ஸாக இருந்தது. கடந்த 2018 ஜனவரி 1 முதல் பெரும்பாலான பொருட்கள் மற்றும் சேவைகளில் 5% என்ற அடிப்படை விகிதத்தில் மதிப்பு கூட்டப்பட்ட வரியை (VAT) வசூலிக்க தொடங்கியது குறிப்பிடத்தக்கது.