UAE Tamil Web

190 கோடி திர்ஹம்ஸ் திட்டம்; எமிரேட்களை இணைக்கும் 3 பிரம்மாண்ட சாலைகளை திறந்துவைத்த துபாய் ஆட்சியாளர்..!

Infrastructure-Dubai-roads_

அமீரகத்தில் 1.9 பில்லியன் திர்ஹம்ஸ் செலவில் கட்டப்பட்ட 3 பிரம்மாண்ட சாலைகள் நேற்று திறக்கப்பட்டன. அமீரகத்தின் துணைத்தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் மற்றும் துணைப் பிரதமரும் ஜனாதிபதி விவகாரத்துறை அமைச்சருமான ஷேக் மன்சூர் பின் சயீத் ஆகியோர் இந்த சாலைகளை திறந்துவைத்தனர்.

இந்தப் புதிய சாலைகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை துபாய் ஆட்சியாளர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அமீரக தலைவர் பெருமதிப்பிகுரிய ஷேக் கலீபா பின் சயீத் அல் நஹ்யான் அவர்களுடைய உத்தரவின் அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டதாக துபாய் ஆட்சியாளர் குறிப்பிட்டுள்ளார்.

Dubai-infrastructure-roads-sheikh-Mohammed-
Image Credit: Twitter/HHShkMohd

எமிரேட்களுக்கு இடையேயான போக்குவரத்து நேரத்தைக் குறைக்கும் நோக்கில் இந்த கட்டுமானப் பணிகளை துவங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஷேக் கலீஃபா பின் சயீத் சாலை

ஷேக் கலீஃபா சாலையின் (E84) நீட்டிப்பான இந்த புதிய சாலை புஜைராவை இணைக்கிறது. ஷார்ஜாவின் மலிஹாவையும் அபுதாபியின் ஷுவைப் பகுதியையும் இந்த சாலை இணைக்கிறது. கலீஃபா சாலையின் குறுக்குவழிச் சாலையிலிருந்து ஷார்ஜா-கல்பா சாலை (E 102) வரை விரிவடைந்து ஷார்ஜாவில் உள்ள மிலீஹா பகுதி மற்றும் அல் மதாம் பகுதி வழியாக தொடர்ந்து அபுதாபியில் அல் ஷுவைப் பகுதியில் முடிவடைகிறது இச்சாலை.

52 கிலோமீட்டருக்கு நீளும் இச்சாலையின் இரு திசைகளிலும் தலா 3 லேன்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சாலைக்கான அதிகபட்ச வேகமாக மணிக்கு 140 கிலோமீட்டராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அல் வதான் சாலை

துபாயின் ஹட்டா, அஜ்மானின் மாஸ்ஃபவுட் மற்றும் ராஸ் அல் கைமாவின் அல் கோர் மலைகளை இந்த சாலை இணைக்கிறது. இந்தப் புதிய சாலை ஹட்டா பகுதியிலிருந்து விரிவடைந்து, அஜ்மானில் உள்ள மாஸ்ஃபவுட் பகுதி, அல்முனை பகுதி மற்றும் ராஸ் அல் கைமாவில் உள்ள வாதி அல் கோரின் மலைகள் வழியாக சென்று ஷார்ஜாவில் உள்ள மிலீஹா பகுதியில் முதல் குறுக்குச் சந்திப்பில் இணைகிறது.

Infrastructure-Dubai-roads
Image Credit: Twitter/HHShkMohd

துபாய் – ஹட்டா சாலை

ஷார்ஜாவின் நிஸ்வா மற்றும் அல் மதாம் சாலைகளை மேம்படுத்தும் நோக்கோடு இந்த துபாய் – ஹட்டா சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இரு திசைகளிலும் இரு லேன்களாக இருந்த சாலைகள் தற்போது மூன்று லேன்களாக மாற்றப்பட்டுள்ளன.

18 கிலோமீட்டருக்கு நீளும் இச்சாலையில் அதிகபட்ச வேகமாக மணிக்கு 120 கிலோமீட்டராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த சாலைத் திறப்பு நிகழ்வில் ஆற்றல் மற்றும் உட்கட்டமைப்புத்துறை அமைச்சர் சுஹைல் பின் முகமது அல் மஸ்ரோயி மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Infrastructure-Dubai-roads_
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap