ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள நெரிசல் மிக்க சந்தை ஒன்றில் நேற்று இரண்டு தீவிரவாதிகள் மனித வெடிகுண்டு தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறார்கள். இந்த கோர தாக்குதலில் 32 பேர் உயிரிழந்தனர்; 110 பேர் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அமீரக வெளியுறவுத்துறை மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகம், “மதத்தின் பெயராலும் அடிப்படை மனிதாபிமானத்திற்கு எதிராகவும் பிராந்தியத்தின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் நிகழ்த்தப்படும் இம்மாதிரியான தாக்குதல்களை அமீரகம் கடுமையாக கண்டிக்கிறது” எனத் தெரிவித்திருக்கிறது.
மேலும், இந்த தாக்குதலில் பலியான மக்களின் குடும்பங்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாகவும் காயமடைந்தோர் விரைவில் குணமாகி வர வாழ்த்துவதாகவும் அமைச்சகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
உடம்பில் வெடிகுண்டுகளைக் கட்டிக்கொண்டு கடுமையான மக்கள் கூட்டம் இருந்த சந்தைக்குள் நுழைந்த இரு தீவிரவாதிகள் எதிர்பாராத நேரத்தில் அதனை வெடிக்கச் செய்தனர். கடந்த மூன்று வருடங்களில் நிகழ்ந்த மிகப்பெரிய தாக்குதல் இது என அந்நாட்டு அரசு தெரிவித்திருக்கிறது.