சவூதி அரேபியா: ஜித்தாவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள பெட்ரோல் பொருட்கள் சேமிப்புப் கிடங்கில் ஹௌதி தீவிரவாதப் படையினர் ஏவுகணை மூலமாக தாக்குதல் நடத்தியுள்ளது மத்திய கிழக்கில் பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது.
இந்நிலையில் ஈரானின் உதவியுடன் இயங்கும் இந்தத் தீவிரவாத குழுவின் தாக்குதலுக்கு அமீரகம் கடும் கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறது.
அமீரக வெளியுறவுத்துறை மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” ஹௌதி தீவிரவாத இயக்கத்தின் இந்த நாச வேலைகளுக்கு அமீரகம் கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறது. பிராந்தியத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு எதிராக இந்தத் தீவிரவாத இயக்கம் இயங்குவதற்கான புது ஆதாரம் இதுவாகும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
“இம்மாதிரியான தீவிரவாத தாக்குதலின்போது சவூதி அரேபியாவுடன் அமீரகம் துணை நிற்கும். அதேபோல சவூதியின் அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் குந்தகம் வருமானால் அமீரகம் சவூதியுடன் இணைந்து தாக்குதலை எதிர்கொள்ளும். தனது குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சவூதி அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அமீரகம் முழு பக்கபலமாக இருக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவூதியின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு குந்தகம் வருமானால் அது அமீரகத்தின் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு வரும் பாதிப்பு என்றே கருதப்படும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.