ஆப்கானிஸ்தானின் கந்தகார் மாகாணத்தில் உள்ளது பீபீ பாத்திமா மசூதி. ஷியா பிரிவினருக்கான இந்த மசூதியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று மனிதவெடிகுண்டுத் தாக்குதல் நடைபெற்றிருக்கிறது. இதில் சுமார் 40 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஏராளமானோர் படுகாயமடைந்திருப்பதாக நேரடி கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. IS தீவிரவாத அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றிருக்கிறது.
இந்நிலையில் அமீரக வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகம் ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற இந்த தீவிரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
பிராந்தியத்தின் அமைதி, நல்லிணக்கம் ஆகியவற்றை பாதிக்கும் வகையில் நடைபெறும் எந்தவொரு வன்முறைக்கும் அமீரகம் என்றென்றைக்கும் எதிரானது என அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதாகவும் காயமடைந்தவர்கள் விரைந்து நலமடைய வாழ்த்துவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.