கொரோனா பரவல் காரணமாக நடப்பாண்டில் சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் இந்தியாவில் ரத்து செய்யப்பட்டன. மாணவர்கள் எதிர்காலம் கருதி 12ம் வகுப்பு மதிப்பெண்களை 10,11ம் வகுப்பு தேர்வு முடிவுகளின் அடிப்படையில் கணக்கிட்டு வழங்க சிபிஎஸ்இ உத்தரவிட்டிருந்தது. அந்த அடிப்படையில் இந்தியாவில் சிபிஎஸ்இ 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. அமீரகத்தில் உள்ள இந்தியாவைச் சேர்ந்த சிபிஎஸ்இ பள்ளிகள் அனைத்துமே 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளன.
இதுவரை வெளியான தகவலின்படி 99.2% மதிப்பெண்கள் பெற்று துபாயைச் சேர்ந்த இந்தியன் ஸ்கூல் மாணவர் நவீன் சுரேஷ் அமீரகத்திலேயே முதல் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். Maths – Biology பிரிவை எடுத்து படித்துள்ள நவீன் சுரேஷ், தேர்வு முடிவுகளில் அதிக மதிப்பெண் பெறுவதை துளியும் எதிர்பார்க்கவில்லை என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். பொறியியல் படிப்பில் சேருவதற்கான JEE படிப்பில் தேர்ச்சி பெற்று இந்தியாவின் தலைசிறந்த கல்விக்கூடமான ஐஐடியில் இணைய நவீன் முயற்சி செய்து வருகிறார். அமீரகத்தில் மொத்தம் 90 சிபிஎஸ்இ பள்ளிக்கூடங்கள் உள்ள நிலையில், அவற்றில் படித்த 10,000க்கும் அதிகமான மாணவர்கள் இந்த முறை 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அமீரகம், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் மொத்தம் 1.3 மில்லியன் மாணவர்கள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 70,004 பேர் 95%க்கும் அதிகமான மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். 99.13% மாணவர்களும் 99.67% மாணவிகளும் இந்த தேர்வில் தேர்ச்சிபெற்றுள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
