உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல்கள், ஆக்கிரமிப்புகள் குறித்து விசாரணை நடத்த சுதந்திரமான விசாரணை ஆணையம் ஒன்றை அமைக்கும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் தீர்மானம் மீதான வாக்கெடுப்புக்கு அமீரகம் ஆதரவு அளித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யாவின் ஆக்கிரமிப்புகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக சுதந்திரமான ஆணையம் ஒன்று அமைப்பது தொடர்பான தீர்மானம் கொண்டு வருவதற்காக ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையம் வாக்கெடுப்பு நடத்தியது.
உக்ரைனில் நிலவி வரும் மனித உரிமைகள் குறித்தான வரைவின் மீது 77 நாட்டு உறுப்பினர்கள் வாக்களித்தனர். தீர்மானத்திற்கு ஆதரவாக 32 உறுப்பு நாடுகள் வாக்களித்தன. அதில் அமீரகம், பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், நேபாளம், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் வாக்களித்துள்ளன.
மேலும் இந்தியா, சீனா, பாகிஸ்தான், சூடான், வெனிசுலா உள்ளிட்ட 13 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன.
பெரும்பான்மையான உறுப்பு நாடுகளின் ஆதரவின் முடிவுப்படி, உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புகள் குறித்து விசாரணை நடத்த, உடனடியாக ஒரு சுதந்திரமான சர்வதேச விசாரணை ஆணையத்தை ஏற்படுத்துவது என தீர்மானித்திருப்பதாக மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
