ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி இந்தியாவிலிருந்து எந்த பயணிகள் விமானமும் அமீரகத்திற்கு வரத் தடை விதிப்பதாக அமீரக பொது சிவில் விமானப்போக்குவரத்து ஆணையம் அறிவித்தது. இதனைத்தொடர்ந்து பல்வேறு முறை இந்த தடையானது நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இதுபுறம் இருந்தாலும் அமீரகத்திலிருந்து இந்தியாவிற்கு விமானங்கள் இயக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. இந்தியாவிலிருந்து அமீரகத்திற்கு வர விதிக்கப்பட்ட தடை காரணமாக அமீரகம் – இந்தியா இடையிலான விமான டிக்கெட் விலை கணிசமாகக் குறைந்துள்ளது.
தற்போதைய நிலையில் துபாய் – புதுதில்லி இடையிலான விமான டிக்கெட் 347 திர்ஹம்ஸ்க்கு விற்பனை செய்யப்படுகின்றன. போலவே, துபாய் – மும்பை 285 திர்ஹம்ஸ்க்கும் துபாய் – கொச்சி செல்ல 489 திர்ஹம்ஸ் கட்டணமாகவும் வசூலிக்கப்பட்டுவருவதாக டிராவல் ஏஜென்சிக்கள் தெரிவிக்கின்றன. ஆகஸ்டு மாதம் 8 ஆம் தேதி துபாய் – சென்னை இடையிலான ஏர் இந்தியா டிக்கெட் 6184 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சரிந்த டிக்கெட் விலை
விமானத் தடை அமலில் இருப்பதால் தற்போதைய சூழலில் இந்தியா சென்றால், உடனடியாக அமீரகம் திரும்பமுடியாமல் போகலாம் என்ற அச்சம் பலருக்கும் இருக்கிறது. இதன்காரணமாகவே அமீரகத்திலிருந்து இந்தியா செல்லத் தயங்குகின்றனர்.
இந்தியாவில் சிக்கிக்கொண்ட பல அமீரக தொழிலாளர்கள் வேலை குறித்த அச்சத்துடனே வாழ்ந்துவருகின்றனர். அமீரக அரசு தரப்பில் இருந்தும் பயணத்தடையை விலக்கிக்கொள்வது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பும் வராததால் இந்தியாவில் சிக்கிக்கொண்டவர்கள் தவித்து வருகின்றனர்.
இதுவே அமீரகத்திலிருந்து இந்தியர்கள் தாயகம் திரும்ப யோசிப்பதற்குக் காரணமாகவும் சொல்லப்படுகிறது.
