UAE Tamil Web

‘டிமென்ஷியா’ நோயால் அவதிப்படும் முதியவர்கள் – உலக அளவில் 2ம் இடத்தை பிடித்த அமீரகம்!

உலகளவில் ‘டிமென்ஷியா’ எனப்படும் மறதி நோய் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் அமீரகம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

பரபரப்பான காலை பொழுதும், மன அழுத்தம் கொடுக்கும் நாட்களும் நமக்கு அதிகப்படியான குழப்பத்தை ஏற்படுத்தலாம். ஒரு சாவியை அல்லது ஆவணத்தை நீங்கள் தவறான இடத்தில் வைத்துவிட்டு மறந்திருக்கலாம். காலை பொழுதில் அவசரமாக அதை தேடும்போது கிடைக்காது. இதனால் நேற்று நடந்த நிகழ்வுகளை யோசிக்க வேண்டி இருக்கும். இதை ஒரு பெரிய நியாபக மறதி பிரச்சனையாக எடுத்துக்கொள்ள முடியாது. இது ஒரு சாதரண பிரச்சனையாகும். உலகில் உள்ள அனைவருக்கும் இந்த மாதிரியான நியாபக மறதி பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

டிமென்ஷியா

நினைவுகள், சிந்தனை, நடத்தை, கற்றல் திறன், மொழி மற்றும் அன்றாட செயல்பாடுகளைச் செய்யும் திறன்களை பாதிக்கும் ஒரு நோய்தான் டிமென்ஷியா. இது பெரும்பாலும் வயதானவர்களையே பாதித்தாலும், வயதுடன் தொடர்புடையது அல்ல. உலகளவில் 50 மில்லியனுக்கும் அதிகமானோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். வருடந்தோறும் 10 மில்லியன் பேர் பாதிக்கப்படுகின்றனர்.

டிமென்ஷியா பெரும்பாலும் 60 -70% பேரிடம் அல்சைமர் என்றே புரிந்துகொள்ளப்படுகிறது. காரணம் அல்சைமர் அல்லது பக்கவாதம் போன்ற மூளையை பாதிக்கும் பலவிதமான நோய்களால் மற்றும் தலையில் அடிபடுதல் போன்ற காரணங்களால் டிமென்ஷியா ஏற்படுகிறது.

முதியவர்களை தாக்கும் டிமென்ஷியா

இந்த நோயால் பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கு பிறரை சார்ந்துகொள்ளக்கூடிய நிலை ஏற்படுகிறது. டினெம்ஷியா உடல்நிலை, மனநிலை, சமூக நிலை மற்றும் பொருளாதார நிலைகளை பாதிக்கும். இது பாதிக்கப்பட்டவர்களை மட்டுமல்லாமல் அவர்களை பார்த்துக்கொள்ளக்கூடியவர்கள், குடும்பம் மற்றும் சமூகம் என பெரிதளவில் தாக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது.

டிமென்ஷியா ஒவ்வொரு நபரிடமும் வித்தியாசமான அறிகுறிகளைக் காட்டுகிறது. மேலும் பாதிப்பின் அளவும் நபருக்கு நபர் மாறுபடுகிறது. சிலர் ஒரே நிலையில் நீண்ட நாட்கள் இருப்பார்கள். சிலருக்கு ஒரே நேரத்தில் பலவிதமான அறிகுறிகள் தென்படும்.

எல்லோருக்குமே இந்த முதல் நிலையில்தான் தொடங்குகிறது. அறிவாற்றல் குறைபாட்டின் அறிகுறிகள் எதுவும் இருக்காது. மனதின் செயல்பாடு இயல்பாகவே இருக்கும்.

மூன்றாவது நிலையில் டிமென்ஷியா அல்லது அல்சைமர் அறிகுறிகளை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் கண்கூடாகப் பார்க்கமுடியும். இந்த நிலை அன்றாட வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும், ஞாபக மறதி, சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லுதல், வாகனம் ஓட்டுவதில் சிரமம் உள்ளிட்ட அறிகுறிகளை நீங்கள் கண்கூடாக பார்க்க முடியும்.

பெரும்பாலான மூத்தவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னையான தேதிகளை மறப்பது, பொருட்கள் வைத்த இடத்தை மறப்பது போன்றவை. ஞாபக மறதியால் பாதிக்கப்பட்டவர்களைப் பராமரிப்பது சவாலான காரியம். தினசரி மருந்து, மாத்திரைகள் எடுக்கவும் உணவைச் சாப்பிடவும்கூட அவர்கள் மறந்துவிடுவார்கள். அவர்களைக் குடும்ப உறுப்பினர்களில் யாராவது ஒருவர் கண்காணித்து பராமரிக்க முன்வருவது பாதிக்கப்பட்டவருக்குப் பெரிதும் உதவும். மாறிவரும் வாழ்க்கை முறையில் தனித்துவிடப்படும் முதியவர்கள் அதிகமாகிவிட்டார்கள். இதுபோன்ற முதியவர்களுக்கு ஞாபக மறதி நோயும் வந்துவிட்டால் பெரும் சிக்கல்தான். பாதிக்கப்பட்டவர்களைத் தனியாக ஒருவர் பராமரிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களைக் கவனிப்பவர் ஞாபக மறதியின் பாதிப்பைக் குறைக்கக்கூடிய சில விஷயங்களை செய்தாகவும் வேண்டும்.

டிமென்ஷியாவை முழுமையாக குணப்படுத்தக் கூடிய மருந்து எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இருந்தாலும் நடைமுறையில் இருக்கும் மருந்துகள் நல்ல பலனை தருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வரும் காலங்களில் உலகம் சந்திக்கப்போகும் மிகப்பெரும் மருத்துவ மற்றும் சமூக நெருக்கடியாக டிமென்ஷியா என்கிற இந்த நோய் உருவாகியிருப்பதாக அல்சைமர்ஸ் நோய்க்கான உலக அமைப்பு எச்சரித்துள்ளது. உலகளவில் ஒவ்வொரு 3 விநாடிக்கும் ஒருவர் இந்த நோயால் தாக்கப்படுகிறார் என்கிறது அந்த அமைப்பு.

ஆய்வு சொல்வதென்ன?

லான்செட் பப்ளிக் ஹெல்த் வெளியிட்ட புதிய ஆய்வின்படி, அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் அடுத்த 30 ஆண்டுகளில், டிமென்ஷியா என்கிற நினைவாற்றல் குறையும் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அமீரகத்தில் மக்கள் தொகையும், அவர்களின் ஆயுட்காலமும் அதிகரித்து வருவதால், அல்சைமர், டிமென்ஷியா போன்ற நோய்களும் அதிகரிக்கும் என துபாய் சிஎம்சி மருத்துவமனையின் மனநல ஆலோசகர் டாக்டர் நிசார் ஹோஜைலி தெரிவித்துள்ளார்.

டிமென்ஷியாவின் எண்ணிக்கை வரும் 2050-ஆம் ஆண்டிற்குள் 3 மடங்கு அதிகரித்து 150 மில்லியனிற்கும் மேற்பட்ட மக்கள் என்ற எண்ணிக்கையை தாண்டும் என்று சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap