UAE Tamil Web

முக்கியச் செய்தி: காலாவதியான விசிட் மற்றும் டூரிஸ்ட் விசாவை வைத்திருப்பவர்கள் மார்ச் 31 ஆம் தேதிவரை அமீரகத்தில் இலவசமாகத் தங்கலாம்..!

uae-visa

காலாவதியான சுற்றுலா மற்றும் விசிட் விசாவை வைத்திருப்பவர்கள் எவ்வித கட்டணமும் செலுத்தாமல் மார்ச் 31 ஆம் தேதிவரையில் அமீரகத்தில் தங்கலாம் என கலீஜ் டைம்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

காலாவதியான ஒரு மாதம் மற்றும் 3 மாத டூரிஸ்ட் மற்றும் விசிட்டிங் விசாக்களின் செல்லுபடிக்காலம் மார்ச் 31 ஆம் தேதிவரையில் நீட்டிக்கப்படுவதாக குடியிருப்பு மற்றும் வெளிநாட்டு விவகாரங்களுக்கான தலைமை இயக்குனரகம் (GDRFA) அறிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் பயண ஏஜெண்டுகள் தங்களது வாடிக்கையாளர்களின் காலாவதியான துபாய் விசாவின் செல்லுபடிக்காலம் மார்ச் 31 ஆம் தேதிவரையில் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

போலவே, சுற்றுலா பயணிகள் தங்களது காலாவதியான விசாவின் செல்லுபடிக்காலம் குறித்து இ-விசா சேவை மூலமாக தெரிந்துகொள்ள முற்பட்டதில் அவை செல்லுபடியாகும் காலம் மார்ச் 31 ஆம் தேதிவரையில் நீட்டிக்கப்பட்டதை உறுதிசெய்துள்ளனர்.

ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் புதியவகை கொரோனா வைரஸ் அதிகளவில் பரவத் துவங்கியதை அடுத்து, அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் கடந்தாண்டு டிசம்பர் 27 ஆம் தேதியன்று சுற்றுலா விசாக்களுக்கு இலவசமாக ஒருமாத கால நீட்டிப்பை அறிவித்தது நினைவிருக்கலாம்.

இதுகுறித்து அபுதாபியில் உள்ள இந்திய தூதரகத்திற்கு வந்த சுற்றறிக்கையில்,” டிசம்பர் 28, 2020 ஆம் தேதிக்கு முன்னர் விசிட்டிங், சுற்றுலா விசாவில் அமீரகம் வந்தவர்களின் விசா மற்றும் நுழைவு அனுமதியின் செல்லுபடிக்காலம் எவ்வித கட்டணங்களும் இல்லாமல் மார்ச் 31, 2021 ஆம் தேதிவரையில் நீட்டிக்கப்படுவதை அமைச்சரகம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

துபாய் விசாக்களுக்கு மட்டும்..?

தேரா டிராவல்ஸ்-ன் ஏஜெண்டான இனாஸ் இக்பால் இதுகுறித்துப் பேசுகையில்,” இந்த கால நீட்டிப்பு துபாயில் வழங்கப்பட்ட விசாக்களுக்கு மட்டுமே பொருந்தும். துபாயில் வழங்கப்பட்ட காலாவதியான விசிட் விசாக்களைக் கொண்டிருந்து ஓவர்ஸ்டே அபராதங்கள் விதிக்கப்பட்டவர்களுக்கே அதில் தள்ளுபடியும் அளிக்கப்பட்டிருக்கிறது” என்றார்.

சான்ட்செட் டிராவல்ஸ் நிறுவனத்தின் தலைமை இயக்குனர் மேத்திவ் ஜான் இதுகுறித்துப் பேசுகையில்,” ஷார்ஜா மற்றும் அபுதாபியில் வழங்கப்பட்ட விசாக்களுக்கு இந்த கால நீட்டிப்பு பொருந்துமா எனத் தெரியவில்லை. இதை நம்பி இருந்த பலரும் ஓவர்ஸ்டே அபராதம் செலுத்தவேண்டிய நிலைமைக்கு வந்திருக்கிறார்கள். அமீரகத்தில் தொடர்ந்து தங்கலாமா? அல்லது தாயகத்திற்கு திரும்பிச் செல்லலாமா? என்பதை முடிவு செய்யும் முன்னர் ஆன்லைன் அமைப்புகளில் இதனை தெளிவுபடுத்திக்கொள்வது நல்லது” என்றார்.

uae-visa
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap