UAE Tamil Web

“கட்டிடத்தில் தீப்பிடித்துவிட்டது.. உடனடியாக வெளியேறுங்கள்” – அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் கதவைத்தட்டி மக்களை வெளியேற்றிய காவல்துறை அதிகாரிக்கு குவியும் பாராட்டுகள்..!

UAE Police

சரியான சமயத்தில் தீ விபத்தில் இருந்து மக்களைக் காப்பாற்றிய ஷார்ஜாவைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிக்கு வாழ்த்துக்கள் குவிந்துவருகின்றன.

ஹசன் சுலைமான் இஸா என்னும் காவல்துறை அதிகாரி வழக்கமாக ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவேளையில் 11 தளங்களைக்கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் தீவிபத்து ஏற்பட்டிருப்பதைப் பார்த்திருக்கிறார்.

உடனடியாக சிவில் பாதுகாப்புப் படைக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார். பின்னர் தனது காரை நிறுத்திவிட்டு அடுக்குமாடிக் குடியிருப்பில் நுழைந்த ஹசன், ஒவ்வொரு பிளாட்டாக சென்று கதவைத்தட்டி, “கட்டிடத்தில் தீப்பிடித்திருக்கிறது உடனடியாக வெளியேறுங்கள்” எனத் தெரிவித்திருக்கிறார்.

கர்ப்பிணிப் பெண் மற்றும் அவரது கணவரைக் கண்ட ஹசன் அவர்களை மாடிப்படி வழியே பத்திரமாக கீழே இறங்குமாறும், தீ விபத்தின்போது லிப்டில் செல்வது ஆபத்தானது என சமயோசித புத்தியுடன் கூறியிருக்கிறார்.

சற்று நேரத்திற்கெல்லாம் தீயணைப்புப்படை சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து தீயை அணைத்தது. குறுகிய நேரத்தில் துரிதமாக செயல்பட்டு அனைவரையும் காப்பாற்றிய ஹசன் அவர்களுக்கு ஷார்ஜா போக்குவரத்துக் காவல்துறையின் செயல்பாட்டுப் பிரிவு இயக்குனர் அகமது அல் செர்கல் விருது வழங்கி கவுரவித்தார்.