உம் அல் குவைனில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இருவேறு விபத்துகளில் இருவர் கடலில் மூழ்கி உயிரிழந்திருப்பதாகவும் 3 பேர் மீட்கப்பட்டிருப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
உம் அல் குவைனின் அல் பெய்ட் அல் முத்வாஹித் கடற்கரைப்பகுதியில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்துப் பேசிய உம் அல் குவைன் காவல்நிலையத்தின் இயக்குனர் பிரிகேடியர் கலீஃபா அல் ஷம்சி,” வெள்ளிகிழமை காலை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு இந்த விபத்து குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப்படை மூன்று பேரை பத்திரமாக மீட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஒருவர் உயிரிழந்தார்” என்றார்.
உயிரிழந்த நபர் ஆசியாவைச் சேர்ந்த உமர் என்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. மீட்கப்பட்ட மற்ற அனைவரும் தேசிய ஆம்புலன்ஸ் மூலமாக உம் அல் குவைன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மற்றொரு சம்பவத்தில் கடலில் மூழ்கி மீட்கப்பட்ட நபர் ஷேக் கலீஃபா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே உயிரிழந்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மக்கள் காலநிலை மோசமாக இருக்கும் போது கடற்கரைக்குச் செல்வதைத் தவிர்க்கவேண்டும் எனவும் இதுபோன்ற நேரங்களில் மிகவும் ஜாக்கிரதையாக செயல்படவேண்டும் எனவும் ஷம்சி தெரிவித்தார்.
