UAE Tamil Web

அமீரகத்தில் வசிப்போர் கவனத்திற்கு: அடுத்தமுறை பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்கு முன்னர் இந்த விஷயத்தில் கவனமாக இருங்கள்..!

social media

அமீரக பொது வழக்குத்துறை சமூக மக்களிடையே அமீரக சட்டதிட்டங்கள் மற்றும் நெறிகளை சமூக வலைத்தளங்கள் வாயிலாக போதித்துவருகிறது. அதன்படி இன்று அமீரக பொதுவழக்குத்துறை ட்வீட் ஒன்றினை வெளியிட்டுள்ளது.

பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களைக் குறைக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள அப்பதிவில்,” 2016 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குழந்தைகள் உரிமைகள் சட்டமான (வதீமா சட்டம்) பெடரல் சட்ட எண் 3 ன் படி, குழந்தைகளைக் குறிவைத்து, பாலியல் ரீதியிலாகவோ அல்லது பொது ஒழுக்கத்தை சீர்குலைக்கும் விதத்திலோ அல்லது அவர்களது நன்னடத்தைகளில் பிறழ்வு ஏற்படும் வகையிலோ ஆடியோ, வீடியோ, அச்சிட்ட பொருட்கள் அல்லது விளையாட்டுகளை பார்ப்பது, பகிர்வது, உருவாக்குவது, அதில் ஓர் அங்கமாக இருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வதீமா சட்டத்தின் 66 வது சரத்தின் அடிப்படையில் மேற்கண்ட விதிகளை மீறுவோருக்கு 1 வருடத்திற்குக் குறையாத சிறைத்தண்டனை மற்றும் 100,000 திர்ஹம்ஸ்க்கு குறையாத மற்றும் 400,000 திர்ஹம்ஸ்க்கு மிகாத அபராதத் தொகை விதிக்கப்படும்.