37.4 C
Dubai
August 10, 2020
UAE Tamil Web

அமீரக விசாக்கள் செல்லுபடியாகும் கால அளவில் அதிரடி மாற்றம் கொண்டுவந்துள்ள அமீரக அரசு..!

uae-visa_

கொரோனா காலத்தின்போது அமீரகத்தின் அனைத்து விசாக்கள், நுழைவு அனுமதி (Entry Permits) மற்றும் எமிரேட்ஸ் அடையாள அட்டைகள் இந்த ஆண்டு இறுதிவரையில் செல்லுபடியாகும் என அமீரக அரசு அறிவித்திருந்தது. (இதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.) இந்நிலையில் ரெசிடென்சி விசா, நுழைவு அனுமதி (Entry Permits) மற்றும் எமிரேட்ஸ் அடையாள அட்டைகள் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்புகள் அனைத்தும் ஜூலை 12, 2020 ஆம் தேதியிலிருந்து செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமீரக கேபினட் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்து நிர்வாக கட்டணங்கள் மற்றும் காலக்கேடு முடிந்தும் சேவைகளை பெறுவோருக்கான அபராதங்களை ஜூலை 12, 2020 லிருந்து வசூலிக்க அனுமதியளித்துள்ளதாக” தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 1, 2020 முதல் 31 ஆம் தேதிக்குள் காலாவதியான அமீரக ரெசிடென்சி விசாக்களை கையில் வைத்திருக்கும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுடைய  (அமீரகத்திற்குள் அல்லது வெளிநாடுகளில் இருப்போர்) விசா செல்லுபடியாகும் காலம் குறித்து வெளியிடப்பட்டிருந்த அறிவிப்பு செல்லாது என தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மார்ச் 1, 2020 ஆம் தேதிக்கு பிறகு காலாவதியான விசா மற்றும் நுழைவு அனுமதி கொண்ட அமீரகத்தில் இருக்கும் வெளிநாட்டவர்களுக்கு இந்த ஆண்டு இறுதிவரையிலும் விசா செல்லுபடியாகும் என அறிவித்திருந்தது தற்போது செல்லாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 1, 2020 ஆம் தேதியோடு காலாவதியான எமிரேட்ஸ் ஐடி கொண்டிருப்போருடைய எமிரேட்ஸ் ஐடியானது இந்த ஆண்டு இறுதிவரையில் செல்லும் என அறிவித்திருந்ததும் தற்போது செல்லாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 1, 2020 ஆம் தேதிக்குப் பின்னர் காலாவதியான அமீரக ரெசிடென்சி விசாக்களைக் கையில் வைத்திருந்து, தற்போது வெளிநாடுகளில் வசிக்கும் நபர்கள் அல்லது வெளிநாடுகளில் 6 மாதத்திற்கும் மேலாக தங்கியிருப்பவர்கள், அந்த குறிப்பிட்ட நாட்டிற்கும் அமீரகத்திற்கும் இடையே விமான சேவை துவங்கப்பட்ட உடன் அமீரக அரசு அளிக்கும் கால அளவிற்குள் அமீரகத்திற்குத் திரும்பலாம் என அமீரக கேபினட் நேற்று அறிவித்திருக்கிறது.

ரெசிடென்சி விசா, நுழைவு அனுமதி, அடையாள அட்டை குறித்து அறிவிக்கப்பட்டிருந்த அனைத்து திட்டங்களும் ஜூலை 11, 2020 ஆம் தேதியுடன் நிறைவுபெறுகிறது. ஆகவே, அடுத்தநாள் அதாவது ஜூலை 12, 2020 ஆம் தேதியிலிருந்து அமீரக அடையாள மற்றும் குடியுரிமைக்கான ஆணையம் வழங்கும் சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமீரகத்தில் உள்ள அமீரக குடிமக்கள், வளைகுடா நாடுகளைச் சேர்ந்தவர்கள் (GCC nationals) மற்றும் அமீரக குடியிருப்பாளர்கள் தங்களது காலாவதியான ஆவணங்களை புதிப்பித்துக்கொள்ள 3 மாத கால கருணை அடிப்படையிலான அவகாசம் அளிக்கப்படும் என அமீரக கேபினட் தெரிவித்திருக்கிறது.

அதேபோல, வெளிநாடுகளில் 6 மாதத்திற்குள்ளான காலகட்டத்தில் வசித்துவரும் அமீரக குடிமக்கள், வளைகுடா நாடுகளைச் சேர்ந்தவர்கள் (GCC nationals) மற்றும் அமீரக குடியிருப்பாளர்கள் அமீரகம் திரும்பிய நாளில் இருந்து, காலாவதியான தங்களுடைய ஆவணங்களை புதுப்பித்துக்கொள்ள ஒரு மாத கால கருணை அடிப்படையிலான அவகாசம் அளிக்கப்படும் என அமீரக கேபினட் தெரிவித்திருக்கிறது.

புதுப்பித்தல் பணிகளுக்காக அவகாசம் அளிக்கப்பட்ட காலத்திற்கு யாருக்கும் அபராதம் விதிக்கப்படாது எனவும் அமீரக கேபினட் தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்களின் கூட்டத்தை தவிர்க்கும் விதமாக, கூடுமானவரையில் இந்த சேவைகள் அனைத்தும் மின்னணு (electronic systems) அமைப்பின் மூலமாகவே வழங்கப்பட வேண்டும் என அமீரக கேபினட் தெரிவித்துள்ளது.

அடையாள அட்டை வழங்கப்படும் வரையிலும், ICA வின் ஸ்மார்ட் அப்ளிகேஷனில் உள்ள புதுப்பிக்கப்பட்ட மின்னணு அடையாள அட்டையை (Renewed Electronic Identity Card) வாடிக்கையாளர்கள் காண்பிக்கும் பட்சத்தில் சேவை மையங்கள் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என அமீரக கேபினட் வலியுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க.!