UAE Tamil Web

ரஷ்யா – உக்ரைன் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க ஐ.நா.வில் அமீரகம் வலியுறுத்தல்

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரின் காரணமாக உக்ரைன் நாட்டு மக்கள் பலர் எல்லை வழியாக அருகில் உள்ள நாடுகளுக்கு அகதிகளாக சென்று வருகின்றனர். இதனால் உக்ரைனில் பணிபுரிந்து வரும் வெளிநாட்டினரும், அங்கு படித்து வரும் வெளிநாட்டு மாணவர்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சூழ்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமீரகத்தின் நிரந்தரப் பிரதிநிதி லனா ஜக்கி நுசைஃப் பங்கேற்றார். அப்போது அவர் உடனடியாக போரை நிறுத்தி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், “ரஷ்யா மற்றும் உக்ரைன் சர்வதேச மனிதாபியமான சட்டங்களை பின்பற்றி அப்பாவி மக்களை பாதுகாக்க முன்வர வேண்டும். இந்த கவுன்சிலில் உள்ள சக உறுப்பினர்களுடன் இணைந்து அமீரகம் இரு நாடுகளுக்கு இடையிலான பகையை தணித்து, போர் நிறுத்தம் என்ற இலக்கை அடைவதற்கு உதவ தயாராக உள்ளது. இந்த நெருக்கடியை பேச்சுவார்த்தை முயற்சிகள் மூலம் தீர்க்க முடியும் என்ற நம்பிக்கை எழுந்து உள்ளது” என்று அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் ரஷிய படைகள் உக்ரைனில் இருந்து திரும்ப பெற வேண்டும் என்ற வரைவு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதில் 11 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தது. இந்தியா, அமீரகம், சீனா உள்ளிட்ட நாடுகள் நடுநிலை வகித்தன. இதனால் இந்த தீர்மானத்தில் தீர்வு எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap