37.4 C
Dubai
August 10, 2020
UAE Tamil Web

மோப்ப நாய்களைக்கொண்டு கொரோனா நோயாளிகளைக் கண்டறியும் சோதனையில் வெற்றிபெற்றிருக்கும் அமீரகம் – 2 வினாடிகளில் கொரோனா இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்கலாம்..!

dogs

மோப்ப நாய்களின் மூலம் ஒருவருக்கு கொரோனா இருக்கிறதா? இல்லையா? என்பதனைக் கண்டறியும் செயல்முறையில் வெற்றிபெற்றிருப்பதாக அமீரகம் அறிவித்திருக்கிறது.

அமீரகத்தில் உள்ள விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு கொரோனா நோய்த்தாக்கம் இருக்கிறதா என்ற பரிசோதனையின் துணை நிலையாக மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாய்களின் அதீத மோப்ப சக்தியின் காரணமாக காவல்துறையில் பாதுகாப்பு பணிகளுக்கு அவை பயன்படுத்தப்படுகின்றன. அதேவேளையில் கொரோனா நோயாளிகளைக் கண்டறிய மோப்ப நாய்களைக் பயன்படுத்தும் திட்டம் இன்னும் பல நாடுகளில் முதிர்ச்சி பெறாத ஆய்வுகளாகவே எஞ்சியிருக்கும் நிலையில், அமீரகம் அதனை சாதித்துக்காட்டியிருக்கிறது. உலகிலேயே கொரோனா நோயாளிகளை கண்டறியும் சோதனையை வெற்றிகரமாக நடத்தும் முதல் நாடு என்னும் பெருமையை அமீரகம் பெற்றிருக்கிறது.

இது எப்படி சாத்தியம்?

இந்த பரிசோதனையில், அமீரகத்தின் தேசிய குழுவில் உள்ள சிறப்பு அணியினரால் அமீரக விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளுள் கொரோனா தொற்று இருப்பதாக சந்தேகிக்கும் நபர்களின் அக்குளில் இருந்து மாதிரிகள் எடுக்கப்படும். இந்த சோதனையின்போது நாய் மற்றும் சந்தேகிக்கும் நபருக்கு இடையில் எவ்வித தொடுதலும் நடைபெறாது. ஒரு தேர்ந்த பயிற்சிபெற்ற நாயால் 2 அல்லது 3 வினாடிகளில் அந்த நபருக்கு கொரோனா இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டுபிடித்துவிட முடியும்.

அமீரகம் வரும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாக அமீரக அரசினால் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளில், இந்த மோப்ப நாய்களின் மூலம் எடுக்கப்படும் பரிசோதனையும் துணை நிலை பரிசோதனையாக இணைக்கப்பட இருக்கிறது.

இந்த பரிசோதனை எப்படி எடுக்கப்படுகிறது என்பதனைக் காண கீழே உள்ள வீடியோவைப் பார்க்கவும்.

இதையும் படிங்க.!