UAE Tamil Web

பைசர் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதியளித்தது அபுதாபி அரசு – ஆனால் இவர்கள் மட்டுமே போட்டுக்கொள்ளலாம்..!

Pfizer

அபுதாபியில் பைசர் பையோஎன்டெக் (Pfizer-BioNTech) கொரோனா தடுப்பூசிக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக எந்த எமிரேட்டின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அபுதாபி நகரம், அல் அய்ன் மற்றும் அல் தஃப்ரா ஆகிய பகுதிகளில் மொத்தம் 11 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இருப்பினும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள விரும்புபவர்கள் கட்டாயம் முன்பதிவு செய்திருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில பிரிவினருக்கு இந்தத் தடுப்பூசி வழங்கப்பட மாட்டது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது, அதன்படி,

  • மூன்றாம்கட்ட தடுப்பூசி ஆய்வின் தன்னார்வலர்கள்.
  • மற்ற கொரோனா தடுப்பூசியின் முதல் அல்லது அதற்கும் மேற்பட்ட டோஸ்களைப் பெற்றவர்கள்.
  • கர்ப்பிணிகள்.
  • மருத்துவக் குழுவினரால் தடுப்பூசி எடுத்துக்கொள்ள கூடாது என வரையறுக்கப்பட்ட உடல்நிலையைக்கொண்டவர்கள்.
  • தடுப்பூசியில் உள்ள வேதிப்பொருளால் அலர்ஜி உண்டாகக்கூடியவர்கள்.
  • 16 வயதிற்கு உட்பட்டவர்கள்.

ஆகியோருக்கு பைசர் கொரோனா தடுப்பூசியானது வழங்கப்படமாட்டாது.

தேசிய தடுப்பூசித் திட்டத்தின் மூலமாக ஏற்கனவே சினோபார்ம் தடுப்பூசி அபுதாபியில் வழங்கப்பட்டுவந்த நிலையில் தற்போது இரண்டாவது தடுப்பூசியாக பைசரை அளிக்க அரசு அனுமதியளித்துள்ளது.

சேஹாவால் நிர்ணயிக்கப்படும் 6 மையங்களில் இருந்து (அபுதாபியில் 3 , அல் அய்னில் 2 மற்றும் அல் தஃப்ராவில் 1) பைசர் தடுப்பூசி எடுத்துக்கொள்ள முன்பதிவு செய்ய விரும்புபவர்கள் 80050 என்ற எண்ணிற்கு போன் செய்யலாம்.

முபதலா சுகாதார நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் 5 மையங்களில் இருந்து (அபுதாபியில் 4 , அல் அய்னில் 1) பைசர் தடுப்பூசி எடுத்துக்கொள்ள முன்பதிவு செய்ய விரும்புபவர்கள் 8004959 என்ற எண்ணிற்கு போன் செய்யலாம் அல்லது MCV@telemed.ae என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

சமூக உறுப்பினர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைத்திட வேண்டும் எனும் நோக்கில் அபுதாபி முழுவதும் 133 மையங்களில் சினோபார்ம் தடுப்பூசியானது வழங்கப்பட்டுவருகிறது. சேஹாவால் நிர்வகிக்கப்படும் சுகாதார மற்றும் டிரைவ் த்ரூ மையங்கள், தனியார் மருத்துவமனைகள் மற்றும் மஜ்லிஸ் ஆகிய இடங்களில் இந்த தடுப்பூசி வழங்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

தேசிய அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் சைஃப் அல் தஹேரி இதுபற்றிப் பேசுகையில்,”அமீரகத்தில் இதுவரை 3.8 மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. 5,081,853 பேருக்கு தடுப்பூசியின் முதல் டோஸ் போடப்பட்டிருக்கிறது. இதன்மூலம் தடுப்பூசி எடுத்துக்கொள்ள தகுதியான நபர்களில் 65.54 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டிருக்கிறது” என்றார்.